அரசை வீட்டுக்குத் துரத்தியடிக்க வீதியில் இறங்கியுள்ளனர் மக்கள்! – ரோஹிணி கவிரத்ன எம்.பி. தெரிவிப்பு.
“எதிர்க்கட்சிக்கு வாக்களித்த மக்கள் மட்டுமன்றி இந்த அரசை அமைப்பதற்காகப் பாடுபட்ட அனைத்து மக்களும் இன்று வீதியில் இறங்கிப் போராடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பதில் மக்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.
“ஆசிரியர் துறைக்கு ஏன் வந்தோம் என்று நினைக்குமளவுக்கு ஆசிரியர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வரலாற்றில் ஒரு நாளேனும் வீதிக்கு இறங்காத – இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த ஆசிரியர்கள், வீதிக்கு இறங்கும் வகையில் இந்த அரசு நடந்துகொண்டுள்ளது.
ஆசிரியர்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்கிய இந்த அரசு, அவர்களது சம்பளம் மற்றும் அவர்களது பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு செயற்படாததுடன் முழு கல்வித்துறையும் பாதிப்படையச் செய்துள்ளது.
இன்று ஆசிரியர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் துறைக்கு வந்து வாழ்வை வீணடித்துவிட்டோமா என்று நினைக்குமளவுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களைத் தங்களது பிள்ளைகளாக நினைத்து சேவையாற்றக்கூடியவர்கள். தற்போதைய நிலையில் தங்களது மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஆசிரியர்கள் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் தொடர்பிலும் நினைவூட்ட வேண்டியுள்ளது.
ஆசிரியர்களை அவதூறாகப் பேசியவர், ஆசிரியர் ஒருவரிடம் கல்வி கற்றுவந்தவரா என்று கேள்வி கேட்கத் தோன்றுகின்றது” – என்றார்.