இனி ஒரு மோதல் நிகழுமானால் மனித இனம் என்று எதுவுமே இருக்காது : சண் தவராஜா
இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ள மேற்குலகச் சார்பு ஊடகங்கள் தற்போது பெரும்பாலும் ‘சீன அபாயம்’ பற்றி அதிகம் பேசுவதை அவதானிக்க முடிகின்றது. நடப்பு உலகில் மனித குலம் எதிர்கொள்ளும் மிகப் பாரிய சவாலாக கொரோனாக் கொள்ளை நோய் உள்ள போதிலும், அதையும் தாண்டி ‘சீன அபாயத்தை’ எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் உலகின் மிகப் பாரிய இராணுவக் கட்டமைப்பான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு (நேட்டோ) முனைப்புக் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
அமெரிக்கா தலைமையிலான 30 நாடுகளின் கட்டமைப்பான நேட்டோ, இரண்டாம் உலகப் போரின் பின்னான காலப்பகுதியில் தோற்றம்பெற்ற பனிப்போரின் விளைவுகளுள் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குச் சவால்விடக் கூடிய எதிர்முகாமாக விளங்கிய சோவியத் ஒன்றியத்திடம் இருந்து மேற்குலகைப் பாதுகாக்கும் நோக்குடனேயே 1949 ஆம் ஆண்டில் இந்தக் கட்டமைப்பு உருவாக்கம் பெற்றது. 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதைவுக்கு உள்ளான பின்னரும் இந்தக் கட்டமைப்பு இன்றுவரை தொடர்கின்றது. ஆயின் இதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்பானதே.
இன்றைய உலகை ஆள்வது அரசுகளே என்ற தோற்றப்பாடு இருப்பினும், உண்மையான ஆட்சியாளர்களாக அல்லது ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிப்பவர்களாகவும், இயக்குபவர்களாகவும் விளங்குபவர்கள் பல்தேசிய வணிக நிறுவன உரிமையாளர்களே. அதிலும் குறிப்பாக ஆயுத தளபாட உற்பத்தியாளர்களே உலகின் செல்நெறியைத் தீர்மானிப்பவர்களாகப் பெரிதும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களால் அவர்களை மீறிச் செயற்பட முடியாத நிலையே மேற்குலக நாடுகளில் பெரும்பாலும் உள்ளமை கண்கூடு. எனவே நேட்டோ போன்ற ஒரு இராட்சத இராணுவக் கட்டமைப்பு சிதைவுறுவதை ஆயுத வியாபாரிகள் விரும்பப் போவதில்லை. மாறாக அத்தகைய ஒரு கட்டமைப்பை உரமூட்டி வளர்ப்பதில் அவர்கள் பாடுபடவே செய்வர்.
சோவியத் ஒன்றியத்தின் பின்னான காலப்பகுதியில் உலகில் நிகழ்ந்த போர்களைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, ஏனைய நாடுகளின் மீதான அனைத்துப் படையெடுப்புக்களிலும் தலைமையேற்ற நாடாக அமெரிக்காவே விளங்கியமை ஒன்றும் இரகசியமல்ல. அது மாத்திரமன்றி, அத்தகைய படையெடுப்புக்கான ‘நியாயப்படுத்தல்கள்’ உண்மைக்கு மாறானவையாகவும், பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களுக்கு ஆதரவானதாகவும் இருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
தற்போது கட்டியமைக்கப்படும் ‘சீன அபாயத்தையும்’ இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய சீன மக்கள் குடியரசு, நேட்டோ உருவான அதே 1949இலேயே தோற்றம் பெற்றது. பல நாடுகளை நேச நாடுகளாகக் கொண்டிருந்த சோவியத் முகாமை எதிர்கொள்ளும் நோக்குடன் உருவாக்கம் பெற்ற ஒரு இராணுவக் கட்டமைப்பு, 72 ஆண்டுகளின் பின்னர் தனியொரு நாட்டை எதிரியாகக் கருதி தனது இருப்பை உறுதிசெய்ய முயற்சிப்பது என்பது எத்தகைய முரண்நகை?
உலக வல்லரசான அமெரிக்காவிற்கு அடுத்த படைத்துறைச் செலவினத்தைக் கொண்ட நாடு சீனாவே. உலக நாடுகளில் அதிக மக்கட்தொகையைக் கொண்ட நாடான சீனாவே, உலகில் அதிக எண்ணிக்கையான படையினரையும் கொண்டுள்ளதாகக் கணிக்கப்படுகின்றது. அமெரிக்கா அல்லது நேட்டோவுடன் ஒப்பிடும்போது, மக்கள் குடியரசு தோற்றம் பெற்றதிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் தனது அயல்நாடுகளுடனான போர்களில் மாத்திரமே படைபலத்தைப் பிரயோகித்து உள்ளது. கொரிய யுத்தம், இந்தியா மற்றும் வியட்நாமுடனான எல்லைத் தகராறு, பர்மாவுடனான சர்ச்சை என்பவற்றுக்கு அப்பால், ஐ.நா. பாதுகாப்புப் படை மற்றும் மேற்கு ஆபிரிக்க கடற்கொள்ளையர்களுக்கு எதிரான படை என்பவற்றில் மாத்திரமே சீனா பங்கெடுத்துக் கொண்டுள்ளது. தனது அரசியல் சித்தாந்தத்தைத் திணித்துவிட எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு நாட்டின் மீதும் இன்றுவரை படைபலத்தைப் பிரயோகிக்காத நாடாக இருந்தும், சீனா ஒரு ‘அபாயம்’ எனக் காட்டப்படுவது எதனால்?
நேட்டோவின் 29ஆவது உச்சி மாநாடு கடந்த மாதம் பெல்ஜியத்தின் புருஷல்ஸ் நகரில் நடைபெற்றது. அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் உட்பட நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்களும், படைத்துறை நிபுணர்களும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர். மாநாட்டை ஒட்டி ஒரு அறிக்கையை வெளியிடும் வழக்கம் 2010ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. முதன்முதலாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சீனாவைப் பற்றி ஒரு இடத்தில்கூடப் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சீனாவைப் பற்றி ஒரேயொரு இடத்தில் மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்தது. 18 மாதங்கள் கடந்து, கடந்த மாதம் நடைபெற்ற உச்சி மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சீனாவைப் பற்றி 60 இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள பைனான்சியல் ரைம்ஸ், “மேற்குலகிற்கும் பீஜிங்குக்கும் இடையிலான உறவு கடந்த 18 மாதங்களில் எத்துணை தூரம் மோசமடைந்துள்ளது என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது” எனத் தெரிவித்துள்ளது. யேர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல், “ஒன்றரை வருடத்தின் பின்னான காலப்பகுதியில் சீனா ஒரு முறையான எதிரியாக வளர்ச்சி பெற்றுள்ளது” என்கின்றது.
“சர்வதேச அரசியலில் வளர்ச்சிகண்டுவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள நாம் ஓரணியாக இணைந்து செயற்பட வேண்டும். எமது அணியின் பாதுகாப்பு நலன்களைக் காக்கும் நோக்குடன் நாம் சீனாவை எதிர்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் செயற்படும் சர்வதேச ஒழுங்குக்கு எதிரான திட்டமிட்ட சவால்களை உருவாக்கிவரும் சீனா, தனது படைபலத்தைப் பெருக்கிவரும் அதேவேளை ரஸ்யாவுடன் இணைந்து செயற்படவும் முயன்று வருகின்றது” என்கின்றது நேட்டோவின் அறிக்கை.
அமெரிக்காவைப் பொறுத்தவரை சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சியைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த வளர்ச்சி உலக மாந்தருக்கு எதிரானது எனக் காட்ட முயற்சி செய்யும் அதேவேளை, சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான ஒரே மார்க்கம் இராணுவ மோதலே என்ற கற்பிதத்தையும் கட்டமைக்க அமெரிக்க அரசு முயல்கின்றது. அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “அமெரிக்க இராணுவத்தின் தலையான கவனம் சீனாவே” எனத் தெரிவித்துள்ளார்.
அரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பிருந்தே சீனாவின் வளர்ச்சி தொடர்பான கவலையை ஜோ பைடன் கொண்டிருப்பதாக அவரது ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பத் துறையில் சீனா கண்டுவரும் வளர்ச்சியோடு போட்டிபோடும் விதமாக, 250 பில்லியன் டொலரை அமெரிக்க நிறுவனங்களுக்கு மானியமாக வளங்கும் திட்டத்தை அண்மையில் அமெரிக்க அறிவித்துள்ளது.
மறுபுறம், சீனாவுடன் ரஸ்யா கைகோர்த்துவிடாமல் தடுத்துவிடும் நோக்கிலான காய்நகர்த்தல்களிலும் மேற்குலகம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ரஸ்யாவின் அயல்நாடும், ரஸ்யாவுக்கு எதிரான கொள்கையைக் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்டதுமான உக்ரைனின் நேட்டோவில் இணையும் கோரிக்கையை ஒத்திப்போட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ரஸ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டினை கடந்த மாதம் சுவிற்சர்லாந்தில் ஜோ பைடன் சந்தித்த விடயம் அனைவரும் அறிந்ததே. இந்தச் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, “ரஸ்யாவுடன் ஒரு மோதலை நான் எதிர்பார்க்கவில்லை என்ற தகவலை புட்டினுடன் பரிமாறப் போகின்றேன்” எனச் சொல்லியிருந்தார்.
‘சீன அபாயத்தை’ எதிர்பார்த்து நேட்டோ பல்வேறு வழிகளிலும் ‘தயாரிப்பு’ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. உண்மையிலேயே சீனாவுடனான ஒரு போரை நேட்டோ மேற்கொள்ளுமா? அவ்வாறு நிகழுமிடத்து அதன் விளைவுகள் என்னாகும்?
சீனப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் அண்மையில் சீனாவுக்கான ரஸ்யத் தூதுவர் அந்திரே டெனிசவ் அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தது. “சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியும், மோதல்போக்கும் அதிகரித்து வருகின்றது. என்றோ ஒரு நாள் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் போர் மூளுமானால், ரஸ்யா யார் பக்கம் நிற்கும்?”
“இந்தக் கேள்விக்குப் பதில் எதுவும் இல்லை. ஏனெனில், அத்தகைய ஒரு மோதல் நிகழுமானால் உலகில் மனித இனம் என்று எதுவுமே இருக்காது. அப்போது, எந்தப் பக்கம் சார்வது என்ற கேள்விக்கே இடமிருக்காது” என்பதே அவரது பதில்.
இதுவே யதார்த்தம். மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நிகழுமானால் அது அணுவாயுதப் போராகவே இருக்கும். அதன் முடிவில் மனிதர்களே இருக்கப் போவதில்லை. இந்த உண்மை அமெரிக்காவுக்கும் தெரியும். ஆயுத வணிகர்களுக்கும் தெரியும். என்றாலும், போர்வெறியை மக்கள் மனதில் உருவாக்கி தமது இலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அவர்களுக்கு ‘சீன அபாயம்’ தேவைப்படுகின்றது என்பதே உண்மை.