அதிநவீன நுணுக்குக்காட்டி வழங்கிவைப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களை கண்டறிவதற்கான அதிநவீன நுணுக்குக்காட்டி உபகரணமொன்றினை வழங்கிவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயன்படுத்திவரும் நுணுக்குக்காட்டி இயந்திரமானது பழுதடைந்துள்ளமையினால், பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்வதில் தாமதம் நிலவிவருவதாகவும், காசநோய் மற்றும் மலேரியா நோயினை கண்டறிவதற்கு வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பியே அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியிருந்தமையினால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்.கே.டீ குறுப் ஓஃப் கம்பனியின் தலைவர்
பீ.நல்லரெத்தினம் தாமாகவே முன்வந்து மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த அதிநவீன தொழிநுட்ப வசதியைக் கொண்ட நுணுக்குக்காட்டியினை போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடத்திற்காக 1.5 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக வழங்கியிருந்ததுடன், நவீன வசதிகளுடன் கூடிய நுணுக்குக்காட்டியொன்றினையும் வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் முன்னிலையில் குறித்த உபகரணத்தை பெற்றுக்கொண்ட போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் இந்த உபகரணத்தை கொண்டு காசநோய் மற்றும் மலேரியா ஆகிய நோயினை தெளிவாக கண்டுபிடித்து நோயாளர்களுக்கு உரிய சிகிச்சைகளை எதுவித தங்குதடையும் இன்றி மேற்கொள்ளலாமென இதன்போது தெரிவித்திருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.