குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் அளித்த பரிசு… அனைவரது கவனத்தையும் ஈர்த்த புத்தகம்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையின் கலாச்சாரம், பண்பாடு குறித்து மனோகர் தேவதாஸ் எழுதிய நூலை பரிசாக வழங்கியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு மதுரையை பற்றி மனோகர் தேவதாஸ் எழுதிய நூலான தி மல்டிபிள் பேக்ட்ஸ் ஆப் மை மதுரை என்ற நூலினை பரிசளித்தார்.
மனோகர் தேவதாஸ் எழுத்தாளராகவும், ஓவியராகவும் புகழ்பெற்றவர், 1936ம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர், கோட்டுசித்திர ஓவியங்கள் வரைவதில் சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொண்டிருந்தார்.
மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள், நாயக்கர் மஹால் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வைக்கோல்களை கொண்டு செல்லும் மாண்டு வண்டி உள்ளிட்ட மதுரையை சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலை கோட்டுச் சித்திரங்களாக பதிவு செய்தார்.
தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், தான் வரைந்த ஓவியங்களையும் இணைத்து மனோகர் தேவதாஸ் எழுதிய புத்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக 1950ம் ஆண்டுகளில் மதுரையில் நிலவிய கலாச்சாரம், பண்பாடு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் எழுதப்பட்ட ”தி மல்டிபிள் பேக்ட்ஸ் ஆப் மை மதுரை” என்ற நூல் 2007ம் ஆண்டு வெளியானது.
இவரது கலைநயமிக்க மதுரை கோயில்கள் மற்றும் புராதான கட்டடங்களின் கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இவருக்கு 2020ம் ஆண்டுக்கான ”பத்ம ஸ்ரீ” விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. மதுரையை பற்றிய புத்தகத்தை குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் பரிசளித்திருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தனது புத்தகத்தை தமிழக முதலமைச்சர் குடியரசு தலைவரிடம் வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாக மனோகர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். கண்பார்வை குறைபாட்டினால், பார்வையை முற்றிலுமாக இழந்திருக்கும் மனோகர் தேவதாஸ், இதுவரை 8 புத்தகங்களை எழுதியிருப்பதாகவும், தனது ஒன்பதாவது புத்தகம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளதென்றும் கூறுகிறார்.