இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா.
நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ர ன்கள், அசலங்கா 65, கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி சார்பில் புவி, சஹல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.
மணீஷ் பாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார். குருணால் பாண்ட்யா 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.
8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
தீபக் சாஹர் 69 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.