ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில், மக்களவையில் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டில் தற்போது வரை 92.8 சதவீத ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
மேலும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு 1,169.38 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 1,276.03 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சாத்வி தெரிவித்துள்ளார்.