மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இல்லை – இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்
ஒட்டு மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இல்லை என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். நாட்டில் மொத்தம் 40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
அதேநேரம் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாத மாவட்டங்கள், மாநிலங்கள் மூன்றாம் அலையில் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
குழந்தைகளுக்கு நோய் தொற்று வாய்ப்பு குறைவாகவே இருப்பதால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் தொடக்கப் பள்ளிகளை முதலில் தொடங்கலாம் என அவர் தெரிவித்தார்.
6 முதல் 9 வயதானவர்களில் 57.2 விழுக்காட்டினருக்கும், 10 முதல் 71 வயதுடையவர்களில் 61.8 விழுக்காட்டினருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 66.7 விழுக்காட்டினருக்கும், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 77.6 விழுக்காட்டினரும் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதாக பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.