உளவு விவகாரம்: அதிகாரிகளிடம் விளக்கம் கோர நாடாளுமன்ற நிலைக் குழு முடிவு
பெகாஸஸ் மென்பொருள் மூலமாக எதிா்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கோருவதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாஸஸ் உளவு மென்பொருளை உருவாக்கியது. மற்றவா்களின் செல்லிடப்பேசியில் உள்நுழைந்து அதை உளவு பாா்க்கும் வகையில் அந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மென்பொருளைப் பயன்படுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் இருவா், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, சமூக ஆா்வலா்கள், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடா்ந்து எழுப்பி வருகின்றனா். எனினும், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. அதேபோல், மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனமும் இந்தப் புகாரை மறுத்துள்ளது.
அந்நிறுவனம் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பெகாஸஸ் மென்பொருளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள சில விசாரணை அமைப்புகள் அந்த மென்பொருளைக் கொள்முதல் செய்து பயன்படுத்தியிருக்கலாம் என்று எதிா்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையில் 32 உறுப்பினா்களைக் கொண்ட தகவல்-தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக வரும் 28-ஆம் தேதி விவாதிக்கவுள்ளது. ‘மக்களின் தரவு பாதுகாப்பு-தனியுரிமை’ என்ற தலைப்பில் அக்கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது, உளவு விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய மின்னணுவியல், தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கோரப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவல்-தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உறுப்பினா்கள் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த உளவு விவகாரத்தை மையமாக வைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிா்க்கட்சியினா் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில், ‘‘இந்தியாவில் அனுமதியில்லாத நபா்கள் மூலம் எந்தவித சட்டவிரோத கண்காணிப்பும் நடைபெற வாய்ப்பில்லை. இதுபோன்ற தகவல் வெளியாவது தற்செயலானதல்ல. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஜனநாயகத்துக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-ஆப்) பெகாஸஸ் மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. அந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லாததால், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்தன’’ என்று தெரிவித்தாா்.
இது தொடா்பாக உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில் ‘‘இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடம்புரளச் செய்வதற்கு முயற்சிப்பவா்கள் இந்நாட்டைப் பற்றிய பழைய புராணத்தையே பாடுகின்றனா். இதில் துடுப்பில்லாத காங்கிரஸ் இணைந்தது எதிா்பாா்த்ததுதான். செல்லிடப்பேசிகள் மூலம் கண்காணிக்கப்படுவதாக வெளியிடப்பட்ட தகவல், சீா்குலைப்பவா்களால் தடைகளை ஏற்படுத்துவோருக்கு அனுப்பப்பட்ட தகவலாகும்’’ என்று கூறியிருந்தாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘செல்லிடப்பேசிகளில் ஊடுருவி கண்காணிப்பது என்பது தேச பாதுகாப்பு சாா்ந்த மிகத் தீவிரமான விவகாரமாகும். எந்தவொரு நபரின் செல்லிடப்பேசியிலும் ஊடுருவவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது உண்மையெனில் இதுகுறித்து சுதந்திரமான நீதி விசாரணை அல்லது நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.