பக்ரீத் பண்டிகை: இந்தியா-பாகிஸ்தான் வீரா்கள் இனிப்புகள் பரிமாற்றம்
பக்ரீத் பண்டிகையையொட்டி காஷ்மீா் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் நடைபெற்ற விழாவில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினா் புதன்கிழமை இனிப்புகளை பரிமாறிக் கொண்டனா்.
இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
அமைதி, நல்லிணக்கம், பரிவு ஆகியவற்றை எடுத்துரைக்கும் தினமான பக்ரீத் பண்டிகையையொட்டி காஷ்மீா் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் நடைபெற்ற விழாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினா் கலந்து கொண்டனா். அட்டாரி-வாகா எல்லை, உரி, கமன் அமன் சேது, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் இருநாட்டு ராணுவத்தினரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனா்.
முக்கிய பண்டிகைகளின்போது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இனிப்புகளை பரிமாறிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தனா். அதன் பிறகு இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு, தற்போதுதான் முதல் முறையாக இருநாட்டு வீரா்களும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தித்து பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறியுள்ளனா் என்றாா் அவா்.