ஹிஷாலினி மரணத்தின் மர்மம் உடன் கண்டறியப்பட வேண்டும்! சிறிதரன் எம்.பி. வலியுறுத்து.
“முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த ஹிஷாலினி யூட்குமார் என்னும் 16 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளது. அச்சிறுமியின் மரணத்துக்குப் பின்னுள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவரது குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே நான் உட்பட அனைத்துத் தரப்பினரதும் கோரிக்கையாகும்.”
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கடந்த 2021.07.03 ஆம் திகதி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமி, 2021.07.15 ஆம் திகதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தார். கொழும்பு விசேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என்.ரூஹுல் ஹக்கால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது ஹிஷாலினி நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மாணவப் பருவத்தை தாண்டியிராத அச்சிறுமியின் அவலத்துக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 16 வயதேயான சிறுமியை பணிப்பெண்ணாக வீட்டு வேலைக்கு அனுப்புமளவுக்கு பொருண்மியத்தால் நலிவுற்றிருக்கும் அந்தக் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியிருக்கின்ற ஹிஷாலினி என்ற ஒற்றைச் சிறுமியின் அவலத்தைத் தாண்டி, இன்னமும் எங்களால் பேசப்படாத எத்தனை எத்தனையோ சிறுமிகளுக்கு இத்தகைய துன்பியல் சம்பவங்கள் நாளாந்தம் நடந்த வண்ணமே இருக்கின்றன. மிஹிந்தலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையவழியில் விற்பனை செய்த சம்பவம் அண்மையில் எமது நாட்டில் நடந்திருக்கின்றது.
இவற்றையெல்லாம் தாண்டி இயல்பாகவோ, எளிதாகவோ கடந்துசெல்ல முடியாத அளவுக்கு ஹிஷாலினிக்கு நேர்ந்திருக்கும் அவலத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிபவர்களை மையப்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அதற்கு அப்பால் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை அரசியலிலிருந்து முழுமையாக ஓரம்கட்டுவதற்கான முஸ்தீபுகள் தற்போதைய அரசால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் காலச்சூழலில் சிறுமியின் மரணத்தின் பின்னணியில் வேறேதும் சதித் திட்டங்களுக்கோ, அரச கைக்கூலிகளுக்கோ தொடர்புள்ளதா என்பது குறித்தும் நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்றுள்ளது.