சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறது கூட்டமைப்பு.

“இந்த அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்திருக்கின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு இன்று அவர் வருகை தந்தபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாசி மாதத்திலிருந்து போராட்டங்களை ஆரம்பித்து வைத்தவர்கள் நாங்கள்தான். எந்தப் போராட்டம் நடந்தாலும் அதற்காக முழுமையான ஆதரவு இருக்கின்றது.
நாங்கள் எந்த நாட்டுக்குச் சார்பானவர்களும் அல்லர்; எதிரானவர்களும் அல்லர். இலங்கைவாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலே எங்களுடைய அரசியல் பிரச்சினை சம்பந்தமாக இந்தியா – இலங்கை தமிழ் மக்கள் சார்பில் 1989 ஆம் ஆண்டு ஒரு சர்வதேச உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுள்ளது.
அது முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதன் காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிச் செயற்படுகின்றோம்.
இந்திய அரசும் தொடர்ச்சியாக அதில் உள்ள விடயங்கள் எல்லாமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாகச் சொல்லி வருகின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பகை இருப்பதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தியாவினுடைய கரை எல்லையும் இலங்கையினுடைய கரை எல்லையும் வெறுமனே 30 கிலோமீற்றர்தான் உள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உரிமைகளைப் பேணுகின்ற நாடுகள் இலங்கைக்குள் வந்து நட்புறவை ஏற்படுத்துவதை வரவேற்கக் கூடிய ஒரு விடயமாகப் பார்க்கலாம். ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் இருப்பது என்பது எங்கள் எவருக்கும் தெரியாத ஒரு விடயம்.
ஒரு கட்சி ஆட்சிதான் அங்கு இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்கு இடம் அளிப்பதை அங்கு காணக்கூடியதாக இல்லை. மனித உரிமை என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு எங்களுடைய நிலைப்பாடு பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியிலும், மனித உரிமை விடயங்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கப்படுகின்ற சமூகம் என்ற வகையிலும், ஜனநாயகத்தை புரிந்து கொண்டவர்கள் என்ற முறையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது மிக மோசமான விடயம். நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்தை வலியுறுத்தி வருகின்றோம். இது தொடர்பாக கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மக்களுக்கு செய்தி சென்றடைவது அதிலும் உண்மை செய்திகள் சென்றடைவது என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானது.
ஊடக அடக்குமுறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காகத் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம்” – என்றார்.