நிகழ்வுகளில் அதிகமானோர் பங்கேற்பது புதிய கொத்தணியை உருவாக்கும் : சவேந்திர சில்வா
“சுகாதார அறிவுறுத்தல்களின்படி அதிகபட்சம் 150 நபர்களின் பங்கேற்புடன் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்பட்ட போதும் அதிகளவானோரின் பங்கேற்புடன் நிகழ்வுகள் நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளன. இது புதிய கொத்தணியை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டது.”
இவ்வாறு இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
கொழும்புக்கு வெளியே நடைபெறும் திருமணங்களுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டவர்கள் 150 பேரை விட அதிகமாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுபோன்ற பின்னணியில் எதிர்காலத்தில் கோவிட்-19 கொத்தணிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
ஆயிரத்து 604 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று பதிவாகியுள்ளன. அவற்றில் 486 பேர் கொழும்பிலும் 279 கம்பாஹாவிலும் 213 பேர் களுத்துறை மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், கோவிட் -19 நோய்த்தொற்று நாட்டில் பரவுவது குறித்து பல்வேறு மருத்துவ சங்கங்கள் எச்சரித்தன. நாளை தொடக்கம் ஒரு நீண்ட வார இறுதியில் வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மக்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.
மிகப் பெரும் கோவிட்-19 நோய்தொற்றை பதிவுசெய்த கோவிட்டின் 3 வது அலை, புத்தாண்டு பருவத்தில் மக்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக தொடங்கியது. எனவே, பொறுப்புடன் செயல்பட மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறோம்.
மேலும், கொழும்புக்கு வெளியே நடைபெறும் திருமணங்கள் குறித்து பெறப்பட்ட தகவல்கள் திருப்தியற்றவை. அனுமதிக்கப்பட்ட வரம்புகளைப் பொருட்படுத்தாமல் திருமணங்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது நடந்தால் புதிய கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது.
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குவதற்காக அரசு இந்த பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. எவ்வாறாயினும், தினசரி ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பின்னணியில் மக்கள் அதிக விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம் – என்றார்.