கொரோனா பயத்தில் 15 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிய குடும்பம்… கிராமத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கொடிய கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் 15 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த வினோத சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடாலி கிராமத்தில் ஒரு கூடார வீட்டினுள் கிட்டத்தட்ட 15 மாதங்கள் தங்களைத் தாங்களே பூட்டிக் கொண்ட ஒரு குடும்பத்தை ஆந்திர மாநில போலீசார் கடந்த புதன்கிழமை (ஜூலை 21) அன்று மீட்டுள்ளனர். இந்த வீட்டில் 50 வயதான ருத்தம்மா, 32 வயதான காந்தமணி மற்றும் 30 வயதான ராணி ஆகியோர் வசித்து வருகின்றனர். தங்களது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததையடுத்து கிட்டத்தட்ட 15 மாதங்கள் தங்களைத் தாங்களே வீட்டினுள் பூட்டிக் கொண்டதாக கிராம சர்பஞ்ச் சோப்பலா குருநாத் என்பர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசாங்கத் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி திட்டத்தை வழங்குவதற்காக தன்னார்வ அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் கட்டைவிரல் ரேகையை பெறச் சென்றபோது தான், இப்படி ஒரு வினோத சம்பவம் குறித்து தெரிந்துகொண்டதாக குருநாத்தும் பிற கிராமவாசிகளும் கூறினர். மேலும் அதிகாரிகள் வீட்டில் முடங்கியிருந்த மூவரையும் வெளியே அழைத்தபோது, வெளியே வந்தால் நாங்கள் இறந்துவிடுவோம் என்றும் கூறி மூவரும் வெளியே வர மறுத்துவிட்டனர். அவர்களின் நிலையைப் பார்த்த தன்னார்வலர், கிராமத் தலைவர் மற்றும் பிற கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
இதுகுறித்து சர்பஞ்ச் குருநாத் ஏ.என்.ஐ பத்திரிகையிடம் தெரிவித்தாவது, “இந்த வீட்டில் சுட்டுகல்லா பென்னி என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் கொரோனா வைரஸ் பரவலை கண்டு மிகவும் பயந்துள்ளனர். எனவே அவர்கள் கிட்டத்தட்ட 15 மாதங்கள் தங்களை தாங்களே வீட்டில் பூட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர். இதுநாள் வரை அந்த வீட்டிற்குச் செல்லும் எந்தவொரு தன்னார்வலரும் அல்லது அரசு சம்பந்தப்பட்ட தொழிலாளியும் யாரும் பதிலளிக்காததால் திரும்பி சென்றுவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்து குருநாத் கூறுகையில், இந்த விஷயம் குறித்து கிராமவாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ராஜோலே சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமாச்சாரி மற்றும் குழுவினர் குடும்பத்தை மீட்க வந்தனர். அப்போது வெளியே வந்த மூவரும் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் தலைமுடியை கூட 15 மாதத்தில் சரிவர சீரமைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் சிறிது காலத்திற்கு அந்த குடும்பம் வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்தால் கட்டாயம் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என்று குருநாத் மேலும் கூறினார். இந்த குடும்பம் சிறிய கூடாரத்திற்குள் தான் தங்கியிருந்தனர். அவர்கள் அந்த சிறிய கூடாரத்திற்குள்ளேயே சிறுநீர், மலம் கழித்துள்ளனர். எதற்குமே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை.இந்தநிலையில் கிராமவாசிகள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம். இப்போது அவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என்று குருநாத் தெரிவித்துள்ளார்.