‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் தொடரும் எண்ணெய் கசிவு : உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கொழும்பு கடற்பரப்பில் தீப் பற்றி எரிந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து தொடர்ந்தும் எண்ணெய் கசிந்து கொண்டிருக்கின்றது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த விதானகே நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் பேரழிவைத் தொடர்ந்து 275 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்துவிட்டன எனக் கூறப்படுகின்றது. ஆனால், கடல் ஆமை இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் இருக்கலாம். அதேபோல், சுமார் 45 டொல்பின்களும் இறந்துவிட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய் கசிவு காரணமாக அதிகமான மீன்கள் இறந்ததனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்த தகவல்களின்படி, கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டு முதல் மூன்று மீற்றர் தொலைவில் உள்ள ஒரு துவாரத்திலிருந்து எண்ணெய் வெளியேறுகின்றது. இந்தக் கசிவை நிறுத்த முடியும்.
எனவே, இந்த கசிவை நிறுத்துவதற்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க முடியாது.கசிவை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்” – என்றார்.