எரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் : Dr. ருவன் எம். ஜயதுங்க
கொழும்பில் 83 ஜூலைக் கலவரம் ஆரம்பித்த விதம் குறித்து பேசும் கதை
அந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார்.
அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய தகவலை சொல்ல வேண்டும் என்ற வேகத்தில், அவ்வூர் கிராம சேவகர் , ஹேமபாலவை சந்திக்க விரைந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு சொல்லப்பட்ட அவசர தகவலை சொல்ல போய்க் கொண்டிருந்த கிராம சேவகர், அதை எப்படி ஆரம்பிப்பது என பலவாறாக யோசித்தவாறே போய்க் கொண்டிருந்தார். அங்கு வாழும் கிராமத்தவர்கள் , கிராம சேவகரை விதானையார் (ராலஹாமி) என்றே அழைப்பது வழக்கம்.
ஹேமபாலவின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த கிராம சேவகர் , ஹேமபாலவின் வீட்டை நோக்கி திரும்பிய போது, தூரத்தே உள்ள வெற்றிலை தோட்டத்தில் ஹேமபால , வேலல் செய்து கொண்டு இருப்பது தெரிந்தது. கிராம சேவகர் , ஹேமபால இருக்கும் திசையை நோக்கி நடந்தார்.
தூரத்தே ஒருவர் , வேகமாக தனது தோட்ட பக்கம் நடந்து வருவதையும், அவர் அந்த ஊர் கிராம சேவககர் என்பதையும் ஹேமபால அடையாளம் கண்டார்.
வெத்திலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஹேமபாலவை தேடி, கிராம சேவகர் வருவது எதற்கு என்று ஹேமபால தெரியாமல் , வெற்றிலை தோட்டத்திலிருந்து முன்னால் நடந்தார்.
கிராம சேவகரின் முகத்தை பார்த்ததும் , ஏதோ நல்ல விடயமாக அவர் வரவில்லை எனும் உணர்வு, ஹேமபாலவை ஆட்படுத்திக் கொண்டது.
ஹேமபாலவின் முகத்திலிருந்து வடியும் வியர்வையை அவரது பனியனால் துடைத்தபடி “விதானை ஐயா , என்ன இது விடிய காலையிலேயே?” என்றபடி அவரை நோக்கி வணங்கி நின்றார்.
“ஹேமபாலவுக்கு ஒரு விசயம் சொல்ல வேண்டியிருக்கு. குழப்பப்பட வேண்டாம்.” என்றவாறு கிராம சேவகர் தனது கண்ணாடியை கழட்டி கையில் எடுத்தார்.
” போலீசில் உள்ள ஒரு கான்ஸ்டபிள்தான், இந்த தகவலை உங்களிடம் சொல்லச் சொன்னார்.” கிராம சேவகர் பேச்சை சற்று நிறுத்தினார்.
“போலீசில் உள்ள ஒரு கான்ஸ்டபிள் ஒரு தகவல் சொன்னாரா?” ஹேமபால, தமக்கும் போலீசுக்கும் எந்த தொடர்பும் இல்லையே என்பது போல தலையை சொறிந்தார்.
“ஓம், யாழ்பாணத்திலிருந்து தகவல் ஒன்று போலீசுக்கு வந்திருக்கிறது” கிராம சேவகர் சொல்லி நிறுத்தினார்.
ஹேமபாலவின் மனதில் ஏதோ ஒன்று தாக்கிய உணர்வு. மூத்த மகன் யாழ்பாணத்துக்கு மாற்றலாகி இரண்டே மாதங்கள்தான் கடந்து போயிருந்தன. அவனுக்கு ஏதாவது பிரச்சனையோ என நினைத்து , “மகனுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்ற வினவும் போதே, ஹேமபாலவின் முகம் சோர்ந்து போனது.
” விதானையாரே! என்ன தகவல் என்று சொல்லுங்க?” ஹேமபால சற்று பதற்றமானார்.
“ஹேமபாலவுக்கு எப்படி சொல்றதென்று தெரியவில்லை. உங்கள் மகன் நேற்றைய நிலக் கண்ணி வெடி ஒன்றுக்கு அகப்பட்டு இறந்துள்ளார். அந்த தகவலை சொல்லச் சொல்லி போலீசார் என்னிடம் சொன்னார்கள்.”
அதைக் கேட்டதும் ஹேமபாலவுக்கு இடி விழுந்தது போலிருந்தது. உடல் சோர்ந்து போய் நிலத்தில் உட்கார்ந்து கொண்டார். “எனது மூத்த மகன் இறந்துட்டானா?” அவர் இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டார்.
“இதை நம்ப முடியாது. இது பிழையான தகவல் விதானையார். போன கிழமை பெரியவனிடம் இருந்து ஒரு கடிதம் கூட வந்ததே” அவரது வாய் வீரியமற்று அதை மறுக்க முணுமுணுத்தது.
அந்தக் கடிதத்தில் சிறு சிறு பிரச்சனைகள் நடப்பதாகவும் , இப்போது இராணுவம் அப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் , அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போது அனுராதபுரத்திலுள்ள வணக்க தலங்களுக்கு எல்லோருமாக சேர்ந்து போக தயாராகும் படியும் எழுதியிருந்தான். அந்த மகிழ்ச்சியில் குடும்பமே அவன் வரும் நாளை எதிர்பார்த்து காத்து இருந்தது. ஆனால் இப்போது?இதென்ன இடி விழும் செய்தி. முகத்தை பொத்திக் கொண்டார்.
” எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது ஹேமபால , புலிகள் தாக்கியதில் நேற்று 13 பேர் இறந்துள்ளார்கள் என கேள்விபடுறன். மரண சடங்குகளை அரச மரியாதையோடு கொழும்பு மாயானத்தில் செய்ய உள்ளார்களாம். குடும்ப உறவுகளுக்கு கொழும்புக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்” கிராம சேவகர் , சோகம் ததும்பிய குரலில் விபரத்தை மறைக்காது நேரடியாகவே சொல்லி முடித்தார்.
ஹேமபால கீழே விழுந்து உட்கார்ந்த இடத்திலேயே சிலையாகிப் போயிருந்தார்.
“ஐயோ, பெரியவன் செத்துட்டானா? இதைக் கேட்டால் தாய்க்காரி மண்ணை தின்பாளே? ஐயோ என் மகனுக்கா இப்படி ஆனது? புதை குழிக்குள்ள இறக்க முதல்ல கடைசியா ஒரு தரமாவது என்னுடைய பெரியவனின் முகத்தை பார்க்க முடியுமோ?” எனக் கதறத் தொடங்கினார்.
ஆயிரமாயிரம் சோகமான எண்ண ஓட்டங்கள் , அவரது மன அலைகளை ஊடுறுத்து சென்று வலியெடுக்க வைத்தது.
” ஹேமபால , உடனே வீட்டுக்கு போவோம். மகனின் இராணுவ முகாமில் உள்ளவர்கள் சில வேளை வரக் கூடும். கொழும்புக்கு போக வேண்டிய பயணத்துக்கு தயாராக வேணும்?” உட்கார்ந்திருந்த கிராம சேவையாளர் , ஹேமபாலவை தாங்கலாக தூக்கி அரவணைத்து பிடித்துக் கொண்டு நடந்தார்.
********
தவராணி , ராஜேசுக்கு தேனீர் தயாரித்து கொடுப்பதற்கு இலெக்ரிக் கேத்தலை கையிலெடுத்தாள். காரின் பொணட்டை திறந்து என்ஜினை நோண்டியதால் , ராஜேசின் கை நிறைய ஒயில் பட்டுக் கறுப்பாகி இருந்தது. அதைப் பார்த்த தவராணி, தேனீர் கோப்பையை கொடுப்பதற்கு முன்னர் கைகளை கழுவச் சொல்ல வேண்டும் என மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
மகன் சதீபனும் , மகள் சுதர்சனியும் இன்னும் சில மணி நேரங்களில் பாடசாலை விட்டு, வீட்டுக்கு வந்து விடுவார்கள். சதீபன் , வரும் போதே சோறு சாப்பிடும் எண்ணத்தோடேயேதான் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பான். சாப்பிட்டதும் , கிரிகெட் மட்டையை எடுத்துக் கொண்டு அயலில் வசிக்கும் நண்பர்களோடு விளையாட என போனால், இருண்ட பிறகே வீடு திரும்புவான்.
சுதர்சனி ,வந்ததும் நேரடியாக அவளது அறைக்கு போய் உடை மாற்றிக் கொள்வதற்கு முன் , உடம்புக்கு ஒரு குளியல் போட்டு விடுவாள். அதன் பின் ஒரு புத்தகத்தை கையிலெடுத்தாள் என்றால் , அவளுக்கு நேரம் போவதே தெரியாது. அவள் அதிகமாக ஜேம்ஸ் ஹாட்லிசேஷின் புத்தகங்களைத்தான் விரும்பி வாசிப்பாள். சாப்பிட வா என்றால் , ஐந்து நிமிடம் பொறுங்கள் என்பாள். அந்த ஐந்து நிமிடங்கள் அடிக்கடி மணித் துளிகளாக நீளும். அப்படியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இழுத்தடித்து, நீண்ட நேரத்துக்கு பின் வேண்டா வெறுப்போடுதான் சாப்பிட வருவாள். அவள் ஒரு புத்தக பூச்சி.
இப்போது வீட்டு தொலைபேசி ஒலித்தது. ராஜேஷ் ரிசீவரை கையில் எடுக்கும் போது ,கைகளில் பட்டுள்ள ஒயில், ரிசீவரில் படாது, விரல்களால் பட்டும் படாமலும் தொலைபேசி ரசீவரை தூக்கி காதோடு வைத்துக் கொண்டார்.
அந்நேரம் பார்த்து டிரைவர் சில்வா , வெளியே நின்ற வானை கராஜில் போடுவதற்காக கேட்டை திறக்கும் சத்தம் கேட்டது. டிரைவர் சில்வா கடையை விட்டு நேரத்தோடு ஏன் வந்தாரோ தெரியாது என, தவராணி தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள் . வானை கராஜினுள் பார்க் பண்ணிய சில்வா , ராஜேஷ் வெளியில் வரும் வரை, வீட்டு கதவோரம் நின்று கொண்டிருந்தார்.
சில்வாவின் வாய், எப்போதும் போல வெற்றிலையை சப்பிக் கொண்டிருந்தது. சில்வா வெற்றிலை சாப்பிடுவது தவராணிக்கு பிடிக்காத ஒன்று. தவராணியோடு எங்காவது போகும் போது சில்வா வெற்றிலை போட மாட்டார். ஆனால் ராஜேஷ் கூட போகும் போது சில்வா வெற்றிலை போடுவதோடு நிற்காமல் , கதவுக்கு வெளியே துப்பவும் செய்வார். அதையெல்லாம் ராஜேஷ் பெரிதுபடுத்துவதே இல்லை. சில்வாவின் வயதுக்கான மரியாதையாக அது தெரியும்.
” யார் கோள் பண்ணினாங்க?” தவராணி , ராஜேஷிடம் கேட்டாள். தவராணியின் கேள்விக்கு , ராஜேஷ் ஒருவித பதிலும் சொல்லாமல் கதவு வரை நடந்து திரும்பினார்.
“உங்களால காரில் போய், பிள்ளைகளை உடனே கூட்டி வர முடியுமா ? நான் சில்வாவோடு , அவசரமாக கடை வரை போய் வர வேணும்.” ராஜேஷின் பேச்சில் ஏதோ ஒருவித பதட்டம் தெரிந்தது.
” ஏன் ? பாடசாலை விட இன்னும் எவ்வளவோ நேரமிருக்கு? என்ன அவசரம்?” தவராணியின் பதில் கேள்வியாக வந்தது.
“பரவாயில்லை, பிள்ளைகளை போய் கூட்டிக் கொண்டு வாங்க. யாழ்பாணத்தில் பிரச்சனையாம். இங்கயும் ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. அவசரமாக ஏதாவது என்றால் கடைக்கு ஒரு கோள் எடுங்க. நான் போக முன்ன மிஸிஸ் தேவராசாவிடம், உங்களை ஒருக்கால் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிட்டு போறன்.” பேசிக் கொண்டே வேக வேகமாக ராஜேஷ் கைகளை கழுவிக் கொண்டார்.
அதைக் கேட்ட தவராணியின் மனம் வெதுவெதுத்தது. இது என்ன பிரச்சனை என , அவள் கலங்கத் தொடங்கினாள். மனம், நிலை கொள்ள மறுத்தது. படபடத்தபடி இரு பிள்ளைகளையும் அழைத்து வரத் தயாரானாள்.
“பார்வதிக்கு கதவை பூட்டிக் கொண்டு இருக்கும் படி சொல்லுங்கோ. யாரும் வந்தால் கதவை திறக்க வேண்டாம் என்றும் சொல்லுங்கோ.” ராஜேஷின் வார்த்தைகள் சற்று கடுமையாக மாறியிருந்தது.
வெளியில் நின்று கொண்டிருந்த சில்வாவிடம், வானை கராஜிலிருந்து வெளியே எடுக்கச் சொன்னார் ராஜேஷ். சில்வா உடனடியாக செயல்பட்டார். வானை வெளியில் எடுத்ததும் கேட்டை மூடிய ராஜேஷ் , பக்கத்து வீட்டு மிஸிஸ் தேவராசாவின் வீட்டை நோக்கி நடந்து சென்று அழைப்பு மணியை அழுத்தினார். அந்த இடைவெளியில் சில்வா சேட் பக்கட்டில் இருந்த வெற்றிலை பொட்டலத்திலிருந்து ஒரு புகையிலையை வாயில் போட்டுக் கொண்டார்.
******
ஹேமபால , கொழும்பு மயானத்தை அடையும் போது மாலையாகி இருந்தது. குமுறி அழும் மனைவியையும் , கடைக் குட்டி மகளையும் பார்க்கும் போதெல்லாம் ஹேமபாலவின் கண்கள் குளமாயின. ஆனாலும் மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு, விக்ரமரத்ன ராலகாமியோடு (கான்ஸ்டபிள்) பொரளை மாயானத்தின் பிரதான வாசலை தாண்டி ஹேமபால உள்ளே நடந்தார். ஓய்வு பெற்ற போலீஸ்காரரான விக்ரமரத்ன ராலகாமி உதவியாக வந்தது அவருக்கு பெரியதொரு உறுதுணையாக இருந்தது. உடைந்த மனதோடு இருந்த ஹேமபால பெரும்பாலும் மௌனியாகவே இருக்க முயன்றார்.
மாயானத்தில் பெரும் தொகையில் மக்கள் குழுமி இருந்தனர். இறந்து போன படையினரின் உறவினர்களது கதறல் சத்தம் ஹேமபாலவையும் உலுப்பி எடுத்தது. அடக்க முடியாத கண்ணீர் , ஊற்றாக வழிந்தோடிக் கொண்டிருந்தது. கையிலிருந்த கைக் குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டு ஹேமபால நிலத்தில் உட்கார்ந்தார்.
” ஹேமபால , இன்னும் உடல்களை கொண்டு வரவில்லையாம்.” விக்ரமரத்ன ராலகாமி ஹேமபாலவிடம் சொன்னார்.
இறந்து போன இராணுவ வீரர்களின் உடல்களை இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யவென, குழிகள் தோண்டப்பட்டு இருந்தாலும் , இன்னும் ஒரு உடலைக் கூட கொண்டு வராத நிலை காணப்பட்டது.
இராணுவ உடை தரித்த இராணுவத்தினர் உடல்களுக்கு மரியாதை செய்ய தயாராக நின்று கொண்டு இருந்தனர். சூழ்ந்து நின்ற போலீசார் மக்களை ஒழுங்கு படுத்தும் காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். பைல் கவரோடு வந்து கெண்டிருந்த ஒரு இராணுவ அதிகாரி , இறந்து போன இராணுவத்தினரின் உறவினர்களை தேடித் தேடி , விண்ணப்ப படிவம் ஒன்றை கொடுத்துக் கொண்டிருந்தார். அச் சமயத்தில் வோக்கி டோக்கியோடு நின்றிருந்த ஒரு போலீஸ் அதிகாரியை நெருங்கிய விக்ரமரத்ன ராலகாமி , என்ன நடக்கிறது எனும் விபரங்களை அறியும் முனைப்பில் அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.
உடல்களை கொண்டு வர தாமதமாவதை கண்ட மக்களின் அமைதி , இழந்து கொண்டு வருவதை உணர முடிந்தது. அதே நேரம் தேசிய உடையில் இருந்த ஒருவர் , அமைச்சர்களும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கே வர எண்ணியிருந்தாலும் , அவர்களது பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இங்கு வருவதில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளதாக உரத்த குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் யாரோ சத்தமாக கத்தி, அவரை திட்டுவது கேட்டது.
” ஹேமபால , உடல்களை இங்கு கொண்டு வருவதில் மாற்றம் செய்துள்ளார்களாம். எங்களை ரேமண்ட்ஸ் மலர் சாலைக்கு வரச் சொல்கிறார்கள். அங்கே வைத்து மகனின் உடலை ஊருக்கு கொண்டு போக தருவார்கள் என்கிறார்கள். இங்கு பிரச்சனைகள் உருவாகலாம் என திட்டத்தை மாற்றியுள்ளார்கள். நாங்கள் ரேமண்ட்ஸ் மலர் சாலைக்கு போவோம்” விக்ரமரத்ன ராலகாமி சொன்னார்.
மக்களின் சல சலப்புக்குள் யாரோ ஒருவர் ஏதோ கத்துவது கேட்டது. அதிக சத்தத்தில் அதை காதில் வாங்க முடியாத நிலை அங்கே தெரிந்தது. மக்கள் ஆவேசமாகியிருப்பதை மட்டும் உணர முடிந்தது.
” பற நாய்கள் , இவனுகள் சிங்கள பொடியன்களை புலிகளுக்கு இரையாக்கி விட்டு , இப்ப உடலைக் கூட காட்ட மாட்டோம் என்கிறார்கள். எங்களுக்கு பிரச்சனையில்லை. பொடியன்களின் உடலை சிதைத்து இருந்தாலும் பரவாயில்லை. எங்கள் பிள்ளைகளின் ஒரு விரலையாவது நாங்கள் பார்க்க வேணும்” யாரோ சொல்வது கேட்டது.
அந்த வார்த்தைகள் ஹேமபாலவின் உயிரை அசைத்தெடுத்தது.
” என்ன? மகனின் உடலை கூட சிதைத்து போட்டார்களா?” ஹேமபாலாவால் வழியும் கண்ணீரை மட்டுப்படுத்த முடியாது தவித்தார். கடைசியாக தங்க மகனின் முகத்தை ஒரு தரமாவது பார்க்க முடியாமல் பண்ணிடுவார்களோ இந்த பாவிகள் என எண்ணி வருந்தினார்.
ஹேமபாலவின் கையை பிடித்துக் கொண்டு விக்ரமரத்ண ராலகாமி , சனத்தை விலத்திக் கொண்டு மாயானத்திலிருந்து பாதையை நோக்கி வெளியே வர முயன்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து ஹேமபாலவின் மனைவியும் , மகளும் கனவுலகில் சஞ்சரிப்பது போல தொடர்ந்து இழுபட்டு வந்து கொண்டிருந்தார்கள்.
மலைபோன்ற உருவத்தையுடைய ஒரு போலீஸ் அதிகாரி, மக்களை கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்த, கடுமையான வார்த்தை பிரயோகங்களை பாவித்துக் கொண்டிருந்தார்.
“டேய், முதல்ல இவனை குழிக்குள் போட்டு மூடுங்கடா.” என பின் பக்கத்திலிருந்து ஒரு சிலர் கத்தினார்கள். அதோடு கற்கள் வந்து விழத் தொடங்கின.
அதே கணம் கை துப்பாக்கியொன்றோடு காட்சியளித்த பௌத்த பிக்கு ஒருவர் முன்னால் வந்து , மக்களை தலைமையேற்பவர் போல ஆவேசமாக பேசத் தொடங்கினார்.
” நீங்கள் சிங்க இரத்தம் கொண்ட , சிங்க இதயம் கொண்ட சிங்களவர்கள். எங்களுடைய பையன்கள் 13 பேரை யாழ்பாணத்தில் கொன்று குவித்துள்ளார்கள். அவர்களின் கண்களை கூட தோண்டி எடுத்துள்ளார்கள். இனியும் அடிமைகளை போல என்ன பார்த்துக் கொண்டு நிற்கிறீங்கள். அரசால் புலிகளை அடக்க முடியாவிட்டால் , நாங்களாவது தமிழ் புலிகளை அழிப்போம்” என்று கர்ஜித்தார்.
அதோடு கனத்தை மாயானத்தை சுற்றி பெரும் சலசப்பும் , குழப்பமும் உருவாகத் தொடங்கியது.
விக்ரமரத்ண ராலகாமி , ஹேமபால குடும்பத்தோடு , ரேமண்ட்ஸ் மலர் சாலைக்கு வந்தடைந்தார்.
இரவு 8 மணி தாண்டியும் கடைக்கு போன ராஜேஷ் வீடு திரும்பாததால் தவராணி கலவரமடைந்து காணப்பட்டாள். தொலைபேசி அலறும் போதெல்லாம், ரிசீவரை ஓடிச் சென்று அவள் எடுத்தது, ராஜேஷின் குரல் கேட்கும் என நினைத்துதான். ஆனால் அது வெவ்வெறு அழைப்புகளாக இருந்தது. இறுதியாக தொலைபேசியில் பேசியது ஜெயபிரகாஷ்.
ஜெயபிரகாஷ் பேசும் போது கொழும்பு முழுவதும் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் , தமிழர்களை , சிங்களவர்கள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் , வேகமாக பாதுகாப்பான ஒரு இடத்துக்கு போயிருக்க பாருங்க எனச் சொல்லும் போது ஜெயபிரகாஷ் குரலில் ஒருவித நடுக்கத்தை தவராணியால் உணர முடிந்தது.
நிலமையை கேட்டு அச்சமடைந்த பிள்ளைகள், படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்கள். வேலைக்கார பெண் கூட அச்சமைடைந்து கதவோரத்தில் உட்கார்ந்து புலம்பத் தொடங்கினாள்.
தவராணி கடையில் உள்ள தொலைபேசிக்கு , பல முறை டயல் செய்து கொண்டேயிருந்தாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. அந்நேரம் பார்த்து யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
வீட்டில் யாருமில்லை என உணர வைப்பதற்காக மின் விளக்குகளை அணைத்து விட்டு , குப்பி விளக்கொன்றை மட்டும் தவராணி ஏற்றி வைத்திருந்தாள்.
தொடர்ந்து கதவு தட்டப்படத் தொடங்கியதும், குழந்தைகள் நடுக்கத்தோடு கட்டில் மூலையில் பதுங்கிக் கொண்டனர். வேலைக்கார பெண் கதறி , புலம்பத் தொடங்கினாள். அவளது செயல் தவராணிக்கு மேலும் கோபத்தையும் , பயந்தையும் அதிகமாக்கியது.
“பார்வதி, கொஞ்சம் வாயை மூடு.” தவராணி கடுமையாக அடி தொனியில் கட்டளையிட்டாள்.
ஆனால் கதவு தட்டப்படும் ஓசை மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
” தவராணி ! தவராணி!! நான் மிஸிஸ் தேவராசா.” வெளியே இருந்து மிஸிஸ் தேவராசாவின் குரல் கேட்டது. மிஸிஸ் தேவராசாவின் குரலைக் கேட்ட பின் தவராணியின் அச்சம் சற்று தணிந்தது. தவராணி முன் பகுதியின் மின் விளக்கை போட்டு விட்டு கதவை திறந்தாள்.
” கொழும்பில் கலவரம் என்று கேள்விப்பட்டீரா? இங்கு இருக்க வேண்டாம். இங்கிருப்பது ஆபத்தானது. எங்கள் வீட்டுக்கு போவோம்.” மிஸிஸ் தேவராசா , தவராணியிடம் பதட்டத்தோடு சொன்னாள்.
“ஐயோ, மிஸிஸ் தேவராசாவின் நான் எப்படி வீட்டை போட்டு விட்டு வருவது. இன்னும் ராஜேஷ் வரவில்லை.” எனும் போதே தவராணியின் கண்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீரை சொரிந்தன.
“ராஜேஷ் எப்படியும் வந்திடுவார். இன்று இரவு இங்கு நீங்கள் இருப்பது பாதுகாப்பாக இருக்காது. காடையர்கள் , வீடுகளை கொள்ளை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வாங்க எங்கள் வீட்டுக்கு போவோம். உங்களுக்கு தேவையானதை எல்லாம் கெதியா எடுத்துக் கொள்ளுங்க. முக்கியமான ஏதாவது இருந்தால் அவைகளையும் எடுத்துக்கோங்கோ.”
வீட்டில் இருந்த நகைகளையும் , பத்திரங்களையும் , பணம் மற்றும் உடுப்புகளையும் வேக வேகமாக ஒரு பெரிய சூட்கேசில் தவராணி அடுக்கினாள்.
“பார்வதி, பிள்ளைகளின் உடுப்புகளை ஒரு பெட்டியில் போட்டு எடு.” தவராணி பார்வதியை அவசரப்படுத்தினாள். நடுக்கத்தோடு இருந்த குழந்தைகள் தவராணியை அணைத்துக் கொண்டார்கள்.
” இரவைக்கு சாப்பிட்டும் இருக்க மாட்டீர்கள். பரவாயில்லை, வீட்டுக்கு போய் ஏதாவது செய்து சாப்பிடலாம். யன்னல் மற்றும் கதவுகளை நன்றாக மூடுங்க. கெதியா போவோம். ” மிஸிஸ் தேவராசாவும் அவர்களோடு சேர்ந்து யன்னல்களையும் , கதவுகளையும் மூட உதவினாள்.
******
கடையில் இருந்த மதிப்பு மிக்க பொருட்களை , பேலியகொடையில் உள்ள , சிங்கள நண்பனின் கராஜில் கொண்டு சென்று, டிரைவர் சில்வாவின் துணையோடு ராஜேஷ் இறக்கி வைத்தார். பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்து முடிய இரவு 8 மணியை தாண்டி இருந்தது.
வெளியில் உள்ள நிலமையில் இரவு நேரத்தில் பயணிக்காது , தங்கி காலையில் போகுமாறு சிங்கள நண்பன் , ராஜேஷிடம் வற்புறுத்திய போதும் , குழந்தைகளும் , மனைவி தவராணியும் தனியாக இருப்பார்கள் என சொல்லி பிடிவாதமாக ராஜேஷ் புறப்பட தயாரானார்.
தன்னோடு உதவிக்கு டிரைவர் சில்வா இருப்பது பயமில்லை என ராஜேஷ் நினைத்தார். ராஜேஷ் வாகனத்தில் எறி , சில்வாவுக்கு போகலாம் என்றார். வாகனம் புறப்பட்டு மருதானை வரை எதுவித பிரச்சனையுமில்லாமல் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே போலீசார் நின்று கொண்டிருந்தாலும் , எவரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
வாகனம் பெரளை சந்தியை அண்மித்து திருப்பிய போது, வீதி முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட சில்வா வாகனத்தின் வேகத்தை குறைத்தார். வீதியின் இரு மருங்கிலும், தீயில் எரியும் வாகனங்களை அவர்களால் காண முடிந்தது. குடி போதையில் , கத்தி ,வாள் மற்றும் பொல்லுகளோடு கத்திக் கொண்டு சிலர் வாகனத்தை நெருங்கினார்கள்.
சில்வா , வாகனத்தை திருப்ப கடும் முயற்சி எடுத்த போதிலும் , வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்றினால் சில்வாவால் உடனடியாக செயல்பட முடியவில்லை. அதற்குள் காடையர்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள்.
“யார் நீங்க? தமிழா? சிங்களமா?” காடையர் குழுவுக்கு தலைமை தாங்குபவன் போல இருந்தவன் கேட்டான். கேட்டு விட்டு கையிலிருந்து வெளிநாட்டு மதுவை கட கடவென அன்னாந்து குடித்தான்.
இரும்பு பொல்லுகளோடும் , வாள்கள் – கத்திகளோடும் நின்றவர்கள் , வாகனத்தை சுற்றி சுற்றி உள்ளே ஏதாவது இருக்கிறதா என நோட்டம் விட்டார்கள்.
“நாங்கள் சிங்களவர். ஐயாவை வீட்டில் விட போய்க் கொண்டிருக்கிறேன்.” சில்வாவின் வாயிலிருந்து தடுமாற்றத்தோடு பதில் வந்தது.
“ஆ… இவரா ஐயா? நீ சிங்களம். ஐயா சிங்களமா?” ஒரு காடையன் கேட்டான்.
ராஜேஷ் பதிலேதும் பேசாமல் கீழே பார்த்தார்.
” நீ சிங்களமா இருந்தால் , புத்த காத்தா (மந்திரம்) ஒன்றை சொல்லும் பார்க்கலாம்?”
ராஜேஷ் நெற்றியிலிருந்து வியர்வை , முகத்தில் வடியத் தொடங்கியது. வியர்வையை கையால் துடைக்கத் தொடங்கிய ராஜேஷின் உடல், இப்போது நடுங்கத் தொடங்கியது.
சில்வா நடுங்கியவாறு பேசத் தொடங்கினான். ” இந்த ஐயா சிங்களவர். எங்களை தயவு செஞ்சு போக விடுங்க.”
அந்த பேச்சில் கோபமடைந்த காடையன் “அடேய் கிழவா, நீ தமிழருக்கு ……. கொடுக்கிறாயா? இவனைப் பார்த்தாலே தெரியுது, இவன் தமிழன் என்று.” எனச் சொல்லிக் கொண்டே , தனது கையிலிருந்த இரும்பு பொல்லால் வாகனத்தின் முன் கண்ணாடி மேல் அடித்தான். அவனது அடியோடு உடைந்த கண்ணாடி துண்டுகள், ராஜேஷ் மற்றும் சில்வாவின் உடல் முழுவதும் சிதறியது.
“டேய், ஐயா இறங்கடா. இல்லாவிட்டால் வாகனத்துக்குள்ளேயே போட்டு உன்னையும் , வாகனத்தையும் எரிப்போம்.” என்றவன் , ஒரு கணம் கூட தாமதிக்காமல் வாகன கதவை திறந்து ராஜேசை வெளியே இழுத்து விதியில் தள்ளி விட்டான்.
“ஐயோ ! எங்கட ஐயாவுக்கு அடிக்காதேங்கோ!” சில்வா கையெடுத்து கும்பிட்டு மன்றாடினான்.
“கிழவா, நீயும் சாகாமல் இறங்கடா” என்றவாறு இன்னொருவன் சில்வாவின் கழுத்தை பிடித்து இழுத்து கீழே இழுத்து போட்டு , நாய்க்கு அடிப்பது போல , சில்வாவின் அடி வயிற்றில் கால்களால் உதைக்கத் தொடங்கினான்.
இதற்குள் ஏனையவர்கள் ராஜேசை சூழ்ந்து கொண்டு பொல்லுகளால் தாக்கத் தொடங்கினார்கள். தலையிலிருந்து உடைந்து வழிந்த இரத்தத்தால், ராஜேசின் முகம் முழுவதும் இரத்தம் வடிந்தது. முகத்தில் தொடர்ந்து விழும் தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள , இரு கைகளாலும் ராஜேஷ் முகத்தை மூடிக் கொள்ள முயன்றார். அடிபட்டு வீழ்ந்து கிடந்த சில்வா மெதுவாக ராஜேஷ் இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றார். ஆட்கள் குழுமியிருந்தமையால் சில்வாவால், ராஜேஷின் நிலமையைக் கூட பார்க்க முடியவில்லை. பெரிய பொல்லுகள் மேலெழுந்து தாழ்வதை மட்டுமே சில்வாவால் அவதானிக்க முடிந்தது. அவை கீழ் நோக்கி செல்லும் போது ராஜேஷின் ஓலம் மட்டும், சில்வாவுக்கு கேட்டது.
“ஐயோ, என்ட ஐயா! அவர் என்ட ஐயா!!” என சில்வா தார் வீதியில் தலையை முட்டிக் கொண்டான்.
******
மறுதினம் பகல் பொழுது வரை, ராஜேஷ் குறித்த எவ்வித தகவலும் தெரியாது தவராணி அழுது கொண்டே இருந்தாள். குழந்தைகளும் , தாயோடு சேர்ந்து இடையிடையே அப்பாவை கேட்டு அழுது கொண்டிருந்தனர்.
” அவர் எங்காவது பத்திரமாக இருப்பார். கவலைப்பட வேண்டாம்.” என்று தனது மனதில் எழும் சந்தேகங்களை மறைத்தவாறே மிஸிஸ் தேவராசா, தவராணியை ஆறுதல்படுத்த முயன்று கொண்டிருந்தார்.
“நோனா, நோனா, இந்த பக்கம் யாரோ கொஞ்சம் பேர் வாறாங்கள்.” என்று பார்வதி கத்தினாள்.
மிஸிஸ் தேவராசா , தவராணியையும் , குழந்தைகளையும் , படுக்கை அறைக்கு போகுமாறு சொல்லி விட்டு கதவை தாழிட்டவாறு , கதவு துளையால் வெளியே அவதானித்தாள்.
நூறு பேருக்கு மேல் அவளது வீட்டை நோக்கி வந்து, முற்றத்தில் குழுமுவதைக் கண்டாள். அங்கே நின்ற நடு வயதையொத்த ஒருவன் , கூட்டத்தை விட்டு , கதவை நோக்கி வருவதை கண்டாள். வந்தவன் வேகமாக கதவை தட்டினான். எது வந்தாலும் முகம் கொடுக்கும் உந்துதலோடு, வேகமாக மூச்சை இழுத்து விட்ட மிஸிஸ் தேவராசா, அச்சத்தை வெளிக் காட்டாமல் கதவை திறந்தாள்.
கதவை திறந்த மிஸிஸ் தேவராசா, அவன் பேச முன்னரே
” இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றாள்.
“நோனா ,நீங்க வீட்டுக்குள் ஒழித்து வைத்திருக்கும் தமிழங்களை வெளியில் விடுங்க.” கதவருகே நின்றவன் கடும் தொனியில் சொன்னான். அவன் கையில் ஒரு வாள் மின்னியது. அவன் முகத்தில் தெரிந்த வெட்டுக் காயம், அவனை பயங்கரமானவன் என்பதை உணர்த்தியது.
“இங்க ஒரு தமிழரும் இல்லை. தயவு செய்து போங்க. இல்லாவிட்டால் நான் பொலீசுக்கு போவேன்.”மிஸிஸ் தேவராசா அதட்டலாக சொன்னாள்.
” நோனா, நீங்க எங்க வேண்டுமானாலும் போங்க. ஆனால் வீட்டுக்குள்ள ஒழித்து வைத்துக் கொண்டுள்ள தமிழங்களை வெளியில் விடாது போனால் , முழு வீட்டுக்கும் நெருப்பு வைப்போம்” அவன் சொல்லிக் கொண்டே இன்னொருவன் கையிலிருந்த பெட்ரல் கானை கையில் வாங்கினான்.
சுற்றி நின்றோர் சந்தோச கோசமிட்டனர். பக்கத்து வீடுகளிலிருந்தோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், ஒரு வார்த்தை கூட பேசாது நின்று கொண்டிருந்தனர்.
அந்நேரம் பார்த்து எங்கோ இருந்து ஒரு வயதான பௌத்த பிக்கு , அங்கு நின்றோரை தள்ளிக் கொண்டு முன்னே வந்தார். பிக்குவானவரை பார்த்ததும், மிஸிஸ் தேவராசாவுக்கு ஒரு புறம் புதுமையாகவும் , மறுபுறம் ஆறுதலான நம்பிக்கையொன்றும் ஏற்பட்டது.
அவர் சந்தியில் உள்ள விகாரையில், உடல் நலமில்லாமல் இருந்த ஜீலாங்கார பௌத்த பிக்குவானவர். இங்கே எப்படி வந்தார் என வியந்தாள்.
“நீங்கள் என்ன மிருகங்களா? என்ன செய்யப் போறீங்க? புலிகள் இருப்பது யாழ்பாணத்தில். இங்க இருக்கிற அப்பாவிகளை கொல்லுறதில நீங்க என்ன லாபம் அடையப் போறீங்க?” என அவர்களை நோக்கி கடும் தொனியில் சத்தமிட்டார்.
“இங்க இருக்கிற தமிழங்கதான் , புலிகளுக்கு காசு அனுப்புறாங்க.” கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் பிக்குவை நோக்கி சொன்னான்.
பௌத்த பிக்கு அவனை சுட்டெரிப்பது போல ஒரு பார்வை பார்த்தார்.
” காசு அனுப்புறதை நீ பார்த்தியா? ம் …. பார்த்தால் கொழுத்து.” பௌத்த பிக்கு அவனுக்கு இடம் விட்டு நகர்ந்து நின்றார். எவரும் பேசவில்லை.
” புண்ணை நோண்டி காணும் சுகத்துக்காக நீங்கெல்லாம் அலையுறீங்க. இதுகளுக்கெல்லாம் எதிர் காலத்தில் நீங்கள் அனுபவிக்க வேணும் என்பதை மறக்க வேணாம். உங்களுக்கும் , உங்களுடைய பிள்ளைகளுக்கும் இந்த பழி பாவம் சும்மா விடாது , சும்மா கிடக்கும் எங்களுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும். இந்த வினை ஒருத்தனையும் சும்மா விடாது” பௌத்த பிக்கு வேதனை தோய்ந்த குரலில் சத்தமாக சபிக்கத் தொடங்கினார்.
அதன் பின் அவர்களால் அங்கு நிற்கும் தைரியம் இல்லை. மெதுவாக கலையத் தொடங்கினார்கள்.
*******
தனது மகனது துவச நிகழ்வுக்கு பிறகு ஹேமபால , தனது மகனின் சம்பள பணம் மற்றும் மீதிக் கொடுப்பனவுகள் குறித்து அறிந்து கொள்ள கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கு போனார்.
முழு கொழும்பு நகரையும் பார்த்த போது , பேயாட்டம் போட்டது போல நகரே காட்சியளித்தது. இடையிடையே கடைகளும் , வீடுகளும் எரியுண்டு காணப்பட்டன. முழு நகரே வெறிச்சோடிப் போய் இருந்தது.
தாக்குதலுக்கு உள்ளான சில்வா வைத்தியசாலையை விட்டு வெளியேறி , தனது முதலாளியின் வீட்டை நோக்கி, முதலாளியின் குடும்ப நிலையை அறிய போனார். கதவுகளும் , யன்னல்களும் மூடப்பட்டு வீடு பாழடைந்தது போல தெரிந்தது. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்ற சில்வா, முதலாளியின் குடும்பம் குறித்து விசாரித்து பார்த்தார்.
அவர்கள் மிஸிஸ் தேவராசா வீட்டுக்கு போய் கேட்கும்படி சொல்ல, மிஸிஸ் தேவராசா வீட்டை நோக்கி சில்வா நடந்தார்.
தலையில் கட்டு போட்டிருந்த சில்வாவை பார்த்தும் “சில்வா என்ன ஆச்சு?” மிஸிஸ் தேவராசா கேட்டார்.
“நோனா , ஒரு பெரிய கொடுமை நடந்தது. என் கண் முன்னாலேயே ராஜேஷ் ஐயாவை அடித்துக் கொன்றார்கள். எனக்கும் அடித்தார்கள். நான் இழுகி இழுகி மருதானை பக்கம் போக முயன்ற போது , போலீஸ் ஜீப் ஒன்றில் வந்த போலீசார் என்னை வைத்தியசாலையில் கொண்டு போய் சேர்ந்தாங்கள். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து இன்றைக்குதான் டிக்கட் வெட்டினாங்கள். இப்ப தவராணி நோனாவும் , பிள்ளைகளும் எங்க?” என்ற சில்வா, பதிலுக்காக காத்திருந்தார்.
மிஸிஸ் தேவராசா ஒரு பெருமூச்சை விட்டார். “ராஜேஷ் ஐயாவின் சாவை போலீசார் வந்து சொன்ன பிறகுதான் தவராணிக்கு தெரிய வந்தது. காடையர்கள் வாகனத்தையும் கொழுத்தி போட்டாங்கள். ரெண்டு நாளைக்கு முன்னதான் தவராணியும் , பிள்ளைகளும் யாழ்பாணத்துக்கு புறப்பட்டாங்கள். அடுத்த மாசம் கனடா போக போறாங்கள். இனி இலங்கையில் இருக்க மாட்டாங்க.”
வயதான சில்வா கண்களை இறுக மூடிக் கொண்டார். அவர் இதயத்திலிருந்து ஒரு பெருமூச்சு வெளி வந்தது.
“நடந்தது பெரியதொரு அநியாயம். அழகான ஒரு குடும்பத்தை, இந்த மிருகங்கள் அழித்து போட்டாங்கள். இதையெல்லாம் பார்க்க நாங்களும் உயிரோடு இருக்கிறோமே” என்ற போது சில்வாவின் கன்னம் கண்ணீரால் நனைந்தது.
“நான் ஊருக்காவது போறேன். இருளுவதற்கு முன்னம் போக வேணும் நோனா”
விரக்தியின் விளிம்போடு, பதிக்கு கூட காத்திராத சில்வா தெருவுக்கு இறங்கி நடக்கத் தொடங்கினார்.
சில்வா போகும் திசையை கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் மிஸிஸ் தேவராசா நின்று கொண்டிருந்தாள். சில்வா நடந்து போகும் திசையில் , எரிந்து போன வீடுகளும் , கடைகளும் , அவள் கண்களுக்கு எரி மலையொன்று வெடித்து சிதறியுள்ளதை போல தெரிந்தது. அந்த வேதனையில் , அவள் இதயம் விம்மி ஓய்ந்தது போல ஒரு பெருமூச்சை வெளியே தள்ளியது. அந்த மூச்சுக் காற்றும், எரியுண்ட நகர் போலவே, தீயின் சூட்டோடு வெளியானது.
எழுத்தாக்கம்: மருத்துவர் ருவன் எம். ஜயதுங்க
(இவர் இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்தவர்)
தமிழாக்கம் : ஜீவன்