கொரோனா தடுப்பூசி: 18-44 வயதுக்குட்பட்ட முன்னுரிமை பிரிவினருக்கு இனி முன்பதிவு அவசியம்
மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்ட முன்னுரிமை பிரிவினர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு இன்று மாலை முதல் இணையவழி முன்பதிவு அவசியம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரையில் உள்ள 18-44 வயதுடைய முன்னுரிமை பிரிவினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இன்று (ஜூலை 23) மாலை முதல் www.maduraicorporation.co.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.
முன்பதிவு செய்கையில் பெயர், வயது, பாலினம், முகவரி, பிறந்தவருடம், தடுப்பூசி வகை, தவணை, அடையாள அட்டை எண், கைப்பேசி எண், இணை நோய் விபரங்கள் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். முதலில் பதிவு உறுதியானதற்கு ஒரு முன்பதிவு எண் குறுஞ்செய்தியாக வரும். பின்னர், தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் எண், நாள், நேரம், இடம் ஆகிய தகவல்கள் வரும் அதனை கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
45 வயதிற்கு மேற்பட்ட நபர்களும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், அவர்தம் கணவர்கள், மாற்றுத் திறனாளிகளின் முன்பதிவு செய்யாமல் நேரடியாக வந்து ஊசி செலுத்தி கொள்ளலாம். இணைய முன்பதிவு செய்ய இயலாத நபர்கள் முகாம் நடைபெறும் இடங்களில் மதியம் 3 முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் இயங்கும் இளங்கோ மாநகராட்சி பள்ளி மையம், திடீர் நகர், அன்சாரி நகர், புதூர், முனிச்சாலை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தடுப்பூசி செலுத்தப்படும்.
வார்டு – 4, 21, 28, 72, 87, 99 ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். வார்டு – 23, 49, 60, 68, 75, 93 ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் செவ்வாய், வியாழன், சனி கிழமைகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.