தடையை மீறி சைரன் பொருத்திய கார்களில் விஐபி போல பவனி வந்த உயர் அரசு அதிகாரிகள்.. செக் வைத்த காவல்துறை!
அமைச்சர்கள், சட்டத்துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற வி.ஐ.பி.க்கள் பீக்கான்கள், சைரன்கள் பயன்படுத்துவதை 2017 முதல் மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி முடிவை மத்திய அரசு எடுத்திருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி கூட பீக்கான்கள் மற்றும் சைரன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலர் இந்த உத்தரவை கடைப்பிடிப்பதில்லை. தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் பீக்கான்களை அகற்றும்படி போக்குவரத்து துறை தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த தடை உத்தரவிற்கு இணங்கினாலும், மேற்கு வங்கத்தில் அரசியல்வாதிகளின் பீக்கான்களுடன் கூடிய வாகனங்கள் தற்போதும் உலா வருகிறது.
குறிப்பாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்த விதிமுறை மீறல் அதிகமாக நடக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளின் கார்களில் பீக்கான்கள் மற்றும் சைரன்களைப் பயன்படுத்துவது தேசிய அரசாங்கத்தால் பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்காக கொல்கத்தா காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்
விதிமுறைகளை மீறி கார்களில் பொருத்தப்பட்டுள்ள சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை அகற்றுவதற்காக சிறப்பு வாகன தணிக்கையை கொல்கத்தா காவல் துறையினர் மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடங்கிய நிலையில் கொல்கத்தா காவல்துறை சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 191 பீக்கான்களை அரசு ஊழியர்களின் கார்களில் இருந்து அகற்றியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, போலீசார் இதேபோன்ற வாகனங்களை குறிவைக்கத் தொடங்கினர். அதன்படி 72 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்படாத பீக்கான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் அரசு ஊழியர்கள், பொறியாளர்கள், மாவட்ட நீதித்துறை நீதிபதிகள், வனத்துறை அதிகாரிகள், துணை செயலாளர்கள், சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் வாகனங்கள் அடங்கும்.
இதுகுறித்து விளக்கிய கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள், சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்கள், தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என கொல்கத்தா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகங்களின் அதிகாரிகளிடம் சைரன்களை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு ஏதாவது சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்கள் முன்னதாக குறித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் 72 மணி நேரத்திற்குள் 191 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.