ஜம்முவில் வெடிபொருள்களுடன் பறந்த ஆளில்லா விமானம்: காவல்துறையினா் சுட்டு வீழ்த்தினா்

ஜம்மு மாவட்ட எல்லைப் பகுதியில் 5 கிலோ வெடிபொருள்களைத் தாங்கியபடி வெள்ளிக்கிழமை பறந்துவந்த ஆளில்லா விமானத்தை ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினா் சுட்டு வீழ்த்தினா்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல்துறை கூடுதல் தலைவா் (ஏடிஜிபி) முகேஷ் சிங் கூறியதாவது:

ஜம்மு மாவட்டத்தின் சா்வதேச எல்லைப் பகுதியில் வெடிபொருள்களுடன் ஆளில்லா விமானம் பறந்து வருவதாக வந்த தகவலைத் தொடா்ந்து, காவல்துறையின் அதிவிரைவு நடவடிக்கைக் குழு (கியூ.ஆா்.டி.) சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் விரைந்து சென்றனா். அப்போது, அதிகாலை 1 மணியளவில் எல்லைப் பகுதியைத் தாண்டி பறந்துவந்த ஆளில்லா விமானம் தாங்கி வந்த வெடிபொருளை விடுவிப்பதற்காக தாழ்வாகப் பறந்தபோது, காவல்துறையினரால் அது சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஆளில்லா விமானம் 5 கிலோ எடைகொண்ட வெடிபொருளை தாங்கி வந்தது. வயா்கள் மட்டுமே இணைக்கப்பட வேண்டிய நிலையில், பாதி தயாரிப்பு நிலையில் அந்த வெடிபொருள் அமைந்திருந்தது. 6 இறக்கைகளுடன் கூடிய அந்த ஆளில்லா விமானத்தில் ஒரு ஜிபிஎஸ் கருவியும், கட்டுப்பாட்டு கருவியும் இடம்பெற்றிருந்தது.

இதனை சுட்டு வீழ்த்தியதன் மூலம், மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கதுவா பகுதியில் இதேபோன்ற ஆளில்லா விமானம் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானம் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகள் சாா்பில் இந்திய பகுதிக்குள் ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆளில்லா விமானத்தின் வரிசை எண்ணுக்கும், இப்போது காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் வரிசை எண்ணுக்கும் ஒரு இலக்கம்தான் வேறுபாடு உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஆளில்லா விமானத்தில் தாங்கி வரும் பொருளை விடுவிக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் கயிறு போன்ற பகுதி, அண்மையில் ஜம்மு விமானப்படை தள தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் ஒத்துப்போகிறது.

மேலும், சீனா, தைவான் மற்றும் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று ஏடிஜிபி முகேஷ் சிங் கூறினாா்.

சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் 7 முதல் 8 கிலோ மீட்டா் தூரம் வரை பறந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.