லட்சங்களை கொடுத்து கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி.. ஆடை விற்பனை மோசடியில் கம்பி எண்ணும் பரிதாபம்

சென்னையில் ரெடிமேட் ஆடைகள் கொள்முதல் செய்து சுமார் ரூ. 2 கோடி வரை பணமோசடி செய்த கணவன் மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் BEE TEE Fabric & Garments என்ற பெயரில் ரெடிமேட் கடை நடத்தி வருபவர் பிரகாஷ். கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியைச் சேர்ந்த செந்தில் (எ) மணிகண்டன் மற்றும் அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் M/s Jeans Brand Factory என்ற பெயரில் பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் துணி கடைகள் நடத்தி வருவதாகக் கூறி பிரகாஷிடம் தங்கள் கடைகளுக்கு துணிகளை மொத்தமாக சப்ளை செய்யக் கோரி இன்வாய்ஸ் (Invoice) மூலமாக ஆர்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் அளித்த invoice-ன் அடிப்படையில் பிரகாஷ், 1கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் ஆடைகளை சப்ளை செய்துள்ளார். துணிகளை பெற்றுக்கொண்ட மணிகண்டன், விஜய நிர்மலா தம்பதியினர் பிரகாஷுக்கு ஒரு சிறிய தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணம் 83 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனையடுத்து செந்தில் (எ) மணிகண்டன் மற்றும் அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகார் மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செந்தில் (எ) மணிகண்டன் மற்றும் அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் M/s Jeans Brand Factory என்ற பெயரில் ரெடிமேட் கடை நடத்தி வருவதாகக் கூறி பிரகாஷ் உட்பட 11 நபர்களிடம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜீன்ஸ் மற்றும் ரெடிமேட் ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்ததுடன், அதில் ஒரு சிறிய தொகையை மட்டும் ரெடிமேட் ஆடைகளை அனுப்பியவர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படைப்போலீசார் தலைமறைவாக இருந்து வந்த மோசடித் தம்பதிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தம்பதியரின் இருப்பிடம் பற்றி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாண்டிசேரி ரோஜா தெருவைச் சேர்ந்த எதிரிகள் செந்தில்(எ) மணிகண்டன்(41) மற்றும் விஜய நிர்மலா(41) ஆகியோரை திண்டிவனத்தில் வைத்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.