மருத்துவ உபகரணங்களின் விலைக்கு உச்சவரம்பு: 91% பிராண்டுகளின் விலை 88% வரை குறைவு
மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான உச்சவரம்பை தேசிய மருந்து விலை ஆணையம் (என்பிபிஏ) நிா்ணயித்துள்ளது. இதையடுத்து, இந்த உபகரணங்களின் 91 சதவீத பிராண்டுகளின் விலை 88% வரை குறைந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பல்ஸ் ஆக்ஸிமீட்டா், ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம், நெபுலைசா், மின்னணு வெப்பமானி, க்ளூக்கோமீட்டா் ஆகியவற்றின் விநியோகஸ்தா்களுக்கான விலையில் 70% வரை மறு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியில் மொத்தம் 684 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. விலை உச்சவரம்பு நிா்ணயத்துக்குப் பிறகு, விற்பனை விலை சரிந்துள்ளதாக 620 நிறுவனங்கள் (91%) தெரிவித்துள்ளன.
விலை உச்சவரம்பு தொடா்பான அறிவிக்கை கடந்த ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட விற்பனை விலை ஜூலை 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால் இதனைத் தீவிரமாக கண்காணித்து முறைப்படுத்துமாறு மாநில மருந்து கட்டுப்பாட்டாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான உத்தரவுகள் என்பிபிஏ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற மருத்துவ உபகரணங்களின் இருப்பை கண்காணிப்பதற்காக பொருட்களின் இருப்பு குறித்த காலாண்டுவாரியான தகவல்களை சமா்ப்பிக்குமாறு தயாரிப்பாளா்கள்/ இறக்குமதியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.