கட்டி முடித்த ஒரே மாதத்தில் உடைந்த தடுப்பணை.. மீண்டும் கட்டித்தர விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை

கடந்த 2019ம் ஆண்டில் தென்பெண்ணையாற்றில் நடுவே கட்டி முடிக்கப்பட்ட அணை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் உடைந்த அந்த அணையை சீரமைத்து விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கடந்த 2020-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தென்பெண்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார்‌ 14 அடி உயரம் கொண்ட தடுப்பணை முழுவதும் நிரம்பும் அளவிற்கு நீர் வழிந்தோடியது. இந்த நீர் தான் விழுப்புரம் தளவானூர் அடுத்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

அணை திறக்கப்பட்ட ஒன்றரை மாதத்திலேயே கடந்த ஆண்டு தடுப்பணை உடைந்து நீர் வெளியேறியது. பெரும சர்ச்சையான நிலையில் தடுப்பணை என்பது நன்றாக இருக்கிறது, தற்போது தடுப்புச் சுவரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சீர் செய்யப்படும் என அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ஆனால் இன்று வரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை, அந்த வாக்குறுதி வெறும் கானல் நீராகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தார்கள். அணையை உடனடியாக சரி செய்து கட்டாவிட்டால், அடுத்த மாதம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.