மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல – வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!
மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளராக இன்றையதினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்….
நான் வவுனியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். வவுனியாவை பொறுத்தவரை தமிழ் சிங்கள இனத்தைச் சேர்ந்த அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மக்கள் வசித்து வருகின்றார்கள்.
அவ்வாறான பிரதேசத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நான் கடமையாற்றி இருந்தேன். எனவே நான் ஒரு சிங்களவனாக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் கடமையாற்றுவதில் எந்தவித இடையூறும் இருக்காது என நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ள பிரதம செயலாளர் சமன் பந்துலசேன நாங்கள் மக்களோடு கடமை ஆற்றும் போது மொழி ஒரு பிரச்சனையாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.