மாற்று வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் பிருத்வி ஷா.
விராட் கோலி தலைமையில் சீனியர் வீரர்களை கொண்ட இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாடி முடித்த பின்னர் ஒரு மாதம் கழித்து தற்பொழுது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருந்த இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ஏற்கனவே சுப்மன் கில் காயம் காரணமாக இந்தியாவுக்கு திரும்பி விட்டார். அவர் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது பயிற்சி ஆட்டத்தில் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் காயமடைந்து உள்ளனர்.
இவர்களும் இந்தியாவுக்கு கூடிய விரைவில் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மூன்று வீரர்களுக்கு மாற்று வீரர்களாக எந்த வீரர்களை இந்திய நிர்வாகம் எடுக்கப் போகிறது என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
மாற்று வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் பிருத்வி ஷா
சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக இவர்கள் இருவரும் விளையாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் சமீபகாலமாக நல்ல பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே முதல் ஒருநாள் போட்டியில் பிரித்திவி 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். அதேசமயம் சூர்யகுமார் யாதவ் மூன்று போட்டிகளிலும் 124 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 62 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 122.77 ஆகும்.
ஒருநாள் போட்டி தொடர் நடந்து முடிந்தவுடன் டி20 தொடரில் விளையாட இவர்கள் இருவரும் தயாராக இருந்த நிலையில் இந்திய நிர்வாகம் இவர்கள் இருவரையும் இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இவர்கள் இருவரும் விளையாடப் போவது தற்போது உறுதியாகியுள்ளது.
தற்போது வந்த தகவலின் படி இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்குப் பின்னர் 2-வது டெஸ்ட் போட்டி முதல் இவர்கள் இருவரும் விளையாட தகுதி பெறுவார்கள். பிருத்திவி இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் விளையாடி நாம் பார்த்திருப்போம். ஆனால் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் விளையாடுவது ரசிகர்கள் அனைவருக்கும் புதிய செய்தியாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் எப்படி விளையாட போகிறார்கள் என்பது குறித்து தற்போது இந்திய ரசிகர்கள் பேசத் துவங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.