மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம்: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை (ஜூலை 28) காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், எதிர்க்கட்சி அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு கூடிய மக்களவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் மற்றும் பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது,
இந்நிலையில் மதியம் கூடிய மக்களவை எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாளை (ஜூலை 28) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.