கொரோனாவின் அபாய வலயமாக மேல் மாகாணம்! – அரசு எச்சரிக்கை.
கொரோனா வைரஸ் பரவலில் மேல் மாகாணம் அபாய வலயமாக உள்ளது என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘வீட்டிலே இடம்பெறுகின்ற கொரோனா மரணங்கள், அதேபோன்று மரணங்களின் போதான கிரியைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்று சுகாதாரத்துறையின் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறிருக்க பிரபல ஊடக நிறுவனமொன்றின் தலைவரது கொரோனா மரணம் அண்மையில் சம்பவித்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் பலர் அவரது இறுதிக்கிரியைகைளில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பு கவசம், உடைகளை அணிந்திருக்கவில்லை. இவ்வாறான விடயங்களுக்கு இடமளிப்பதா? இது ஒரு விமர்சனத்துக்குரிய விடயமாக மறிவிட்டதே?’ என்று குறித்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
“நீங்கள் கண்ட காட்சிகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். கொரோனாத் தொற்று பரவல்களுக்கான சாத்தியக்கூறுகள் அங்கு நடந்திருப்பின் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்” என்றார்.
‘வீடுகளில் நடக்கும் மரணங்களில் பி.சி.ஆர். பரிசோதனையை நடத்தி கொரோனா மரணத்தை உறுதிபடுத்துவதில் ஒரு தாமதம் காணப்படுகின்றது. வீடுகளில் மரணிப்பவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றால் பி.சி.ஆர். பரிசோதனைக்கும் முன்பும் பின்பும் அது கொரோனா மரணமாகவே கருதப்படுகின்றது. எனவே, இவ்வாறான மரணங்களுக்குத் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை தாருங்கள்’ என்று ஊடகவியலாளர் ஒருவர் வேண்டுகோளை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
“இவ்விடயம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துப் பார்க்கின்றோம். எனினும், உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்தே இந்த விடயம் தொடர்பில் தீர்hமனம் எடுக்க முடியும். சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபம் இருக்கின்றது. கோவை இருக்கின்றது. அந்தக் கோவையின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளரே தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது” – என்றார்.
‘டெல்டா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 30 வீதத்தினருக்கு இருக்கின்றது. தடுப்பூசிகள் இரண்டும் செலுத்தப்பட்டவர்களும் கொரோனாத் தொற்றால் மரணிக்கின்றனர். இது தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க முடியுமா?’ என மற்றுமொரு கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
“இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளோம். இந்த விரிவான அறிக்கைகளை அவ்வப்போது ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியோ, நடத்தாமலோ வெளியிட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அந்த வேண்டுகோளை விடுத்துள்ளோம். செய்திகளினூடாக அவர்கள் அதனைத் தெரிவிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் எவருக்காவது தொற்று ஏற்பட்டிருந்தால் அது தொடர்பான விளக்கத்தை வழங்க வேண்டும். இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டமை குறித்து விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதனால் தொற்று ஏற்படும் நிலைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், மேல் மாகாணம் ஓர் அபாய வலயமாக இருப்பதால் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றோம். அங்கே பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதில் வெற்றிகண்டுள்ளோம்” – என்றார்.