ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரை 4-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் லீவிஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் ஹசில்வுட், அஷ்டோன் அகர், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அலேக்ஸ் கேரி 35 ரன்களும், மேத்யூ வடே ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 30.3 ஓவரிலேயே 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 3-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது.