6 வயது இரட்டையர்களை கடத்தி துடிதுடிக்க கொலை… குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனை
ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்தியபிரப்பிரதேசத்தைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி பிரிஜேஷ் ராவத்தின் இரட்டைக் குழந்தைகளான ஷிரேயான்ஷ், பிரியான்ஷ் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சித்ரகூட்டில் உள்ள பள்ளியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர்.
மட்டுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்ற கும்பல் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக அந்த கும்பலுக்கு ரூ.20 லட்சம் கைமாறிய நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க முடியாது எனக் கூறி அந்த கும்பல் மிரட்டியுள்ளது.
இதனையடுத்து குழந்தைகளைக் கொலை செய்த கும்பல், உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா பகுதிக்கு அருகே யமுனா நதியில் உடல்களை வீசினர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார் உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் வசிக்கும் ராஜு என்ற ராகேஷ் திவேதி, லக்கி சிங் தோமர், ரோஹித் திவேதி மற்றும் ராம்கேஷ் யாதவ், ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிண்டோ யாதவ் மற்றும் சித்ரகூட்டில் உள்ள நயாகானில் வசிக்கும் பத்ம் சுக்லா ஆகியோரை கைது செய்தனர்.
பிரதான குற்றவாளியான ராம்கேஷ் யாதவ் இரட்டையர்களின் ஆசிரியராக இருந்தார் என்பது விசாரணையில் அம்பலமானது. 2019 மே மாதம் ராம்கேஷ் யாதவ் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது இரட்டை குழந்தைகள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, ஒரு ஆயுள் தண்டனை முடிந்ததும், அடுத்த ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுக்லா ராஜு மற்றும் லக்கி சிங் தோமர் உள்ளிட்ட மூவருக்கு மரணம் அடையும் வரை நான்கு முறை ஆயுள் தண்டனையும், ரூ.1.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.