ரிஷாத்தின் மைத்துனர் , சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று , நல்லாட்சி காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார் ….
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி , ஷியாப்தீன் ஆயிஷாவின் மற்றொரு சகோதரர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2007 மே 29 அன்று சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
பதியுதீனின் மனைவி , ஷியாப்தீன் ஆயிஷாவின் சகோதரரான முகமது ஹனீஷ் என்ற நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. L 17462 இன் கீழ் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலத்தை அனுபவித்து வந்த அவர் , தண்டனை காலமான 15 வருடத்துக்கு முன்னனரே,9 வருடங்கள் தண்டனையை அனுபவித்திருந்த நிலையில் 2016ம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து கொண்டிருந்தபோது எரியுண்டு இறந்த இஷாலினி ஜூட் இருந்த சமயத்தில், பதியுதீனின் மனைவியின் சகோதரர் ஒருவர் அந்த வீட்டில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையான அதே நபர்தான் , எரியுண்டு இறந்த இஷாலினி அங்கு பணிபுரிந்த காலத்தில் அங்கு இருந்தாரா என இன்னும் தெளிவாகவில்லை.
ஷியாப்தீன் ஆயிஷாவின் சகோதரரான முகமது ஹனீஷ் சிறையில் இருந்த நேரத்தில் ரிஷாத் பதியுதீன் நல்லாட்சி அரசின் அமைச்சராக இருந்தார் என்றும், அந்தக் காலத்தில் அவர் தனது மைத்துனரை விரைவில் விடுவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளன.