இசாலினியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் மரணித்த டயகம சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச நீதவான் கண்காணிப்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் வைத்திய பீட நீதிமன்ற வைத்திய நிபுணர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய துறை தொடர்பான விசேட நிபுணர் பிரபாத் சேனசிங்க ஆகியோர் பிரேத பரிசோதனை செய்யும் விசேட குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இந்த மரணம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்றைய தினம் டயகம பகுதிக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவொன்று மரணமடைந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தையிடம் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.