மர்மமாக மரணமாகியுள்ள ஹிஷாலினியை ரிஷாட்டுக்கு தெரியாதா? : பா.நிரோஸ்

#சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றவாளிகளைப் பாதுக்காக்கிறது
#சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா?
#அஜித் ரோஹனவை சவாலுகுட்படுத்துகிறார்களா?
#6 மாதங்களுக்கு 185,000 ஏன்?
#பொன்னையா, நாகையாவுக்கு என்ன தொடர்பு?

(பத்திரிகையில் இணைக்கப்படாதவற்றையும் இணைத்து முழுமையான 
நேர்காணலை பதிவிட்டுள்ளேன். பா.நிரோஸ் )

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்து மர்மமானமுறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.

சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்தது முதலே, இந்த விடயத்தை தேடியறிந்து இதுத் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளையும் ப்ரனிதா வர்ணகுலசூரிய செய்திருந்தார்.

தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முழுவிவரங்கள் வருமாறு,

கேள்வி; சிறுமி உயிரிழந்த சம்பவத்தை எவ்வாறு நீங்கள் அறிந்துக்கொண்டீர்கள்?

பதில்; ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பு என்றவகையில், நாம் கடந்த மூன்று வருடங்களாக, நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் நிலவும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி வருகிறோம்.

இம்மாதம் 6ஆம் திகதி இணையத்தளம் ஒன்று, ரிஷாட்டின் வீட்டில் மர்மமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி டயகமத்தைச் சேர்ந்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்றைப் பார்த்தோம்.

இதில் எங்களுக்கு சரியானத் தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால், 7ஆம் திகதி மாலை சிறுமியின் சொந்த ஊரான டயகம பொலிஸ் நிலையத்தை தொடர்புக்கொண்டோம். டயகம பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்றார்கள்.

சிறுமியின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் இருப்பதாக சிறுமியின் அம்மா உள்ளிட்டக் குடும்பத்தார் சந்தேகிக்கிறார்கள். இவ்வாறான சம்பவத்தை டயகம பொலிஸாருக்கு அறிவிக்காது விட்டது எவ்வாறு?

பொரளையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் தங்களுக்கு தெரியாதென கூறுகிறார்கள். இதுத் தொடர்பில் விசாரிக்க வேண்டுமென 7ஆம் திகதி மாலை 7.15 மணியளவில் பொலிஸ் தலைமையகத்துக்கு 0112430913 என்கிற தொலைபேசி இலகத்தூடாக முறைப்பாடு செய்தோம். (முறைப்பாட்டு இலக்கம் CR1134/21)
இத்தோடு நின்றுவிடாது, 1929 என்கிற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இதுத் தொடர்பில் விசாரிக்க வேண்டுமென முறைப்பாடு செய்தோம். (முறைப்பாட்டு இலக்கம் CC/21/07/332)

இச்சம்பவம் பாரதூரமான விடயமாக இருந்தபோதிலும், சிறிய குற்றங்களை விசாரிப்பதுபோலேயே பொரளை பொலிஸார் இதனை விசாரித்து வருவதையும் தெரிந்துக்கொண்டோம். இச்சம்பவத்தை பொரளை பொலிஸார் ஒரு குற்றமாகக்கூட கருதவில்லை.

சிறுமி தொடர்பில் தொடர்ந்து தகவல்களை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம்.

சிறுமி 12 நாள்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், 15ஆம் திகதி உயிரிழந்தார். சிறுமி பேச முடியாத நிலையில் இருந்தார். எனவே அவரிடம் வாக்குமூலம் பெறமுடியவில்லை என பொரளை பொலிஸார் தெரிவித்தார்கள்.

சிறுமி பேச முடியாது இருக்கிறார் சரி. ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பேச முடியாமலா இருந்தார்கள்? அவர்களிடம் ஏன் சிறுமி வைத்தியசாலையில் இருந்தபோது வாக்குமூலம் பெறவில்லை?

கேள்வி; எப்படி டயகம சிறுமி ரிஷாட்டின் வீட்டுக்கு வேலை செய்ய வந்தார்?

பதில்; பொன்னையா என்கிற 64 வயதுடைய தரகர் ஊடாகவே சிறுமி ரிஷாட் வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறார். இதுவொரு பெரிய கதை. பொன்னையாவின் மகள், பொன்னையாவின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தபோது, பொன்னையாவுக்கு தெரியாமல் சில வருடங்களுக்கு முன்னர் பொன்னையாவின் மகளை வெள்ளவத்தையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டு வேலைக்கு, பொன்னையாவின் சகோதரியின் கணவரான நாகையா அழைத்து வந்துள்ளார்.

இந்த ஆசிரியர் ரிஷாட்டின் பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புக்களை ரிஷாட்டின் வீட்டுக்குச் சென்று நடத்தி வந்துள்ளார். இந்த ஆசிரியர் தனது வீட்டு வேலைக்கு வந்த பொன்னையாவின் மகளை ரிஷாட் வீட்டுக்கு தொழிலுக்கு அனுப்பியுள்ளார். இதன்போதே பொன்னையாவுக்கும் ரிஷாட் வீட்டுக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

கேள்வி்; ரிஷாட் வீட்டுக்கு டயகம சிறுமி எப்போது வீட்டுக்கு வேலைக்கு வந்தார் என்பதுத் தொடர்பான சரியான தகவல் இருக்கிறதா?

பதில்; சிறுமி எப்போது ரிஷாட் வீட்டுக்கு வந்தார் என்கிற சரியான திகதி தெரியாது என பொலிஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால் பொன்னையா கடந்த வருடம் நவம்பர் 14ஆம் திகதியே சிறுமி ரிஷாட் வீட்டுக்கு சென்றதாக கூறுகிறார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, இச்சிறுமி 16 வயதுக்கு குறைவான சிறுமி என தெரிவிக்கிறார்.

கேள்வி; இச்சம்பவத்தில் ரிஷாட்டும், அவரது குடும்பத்தாரும் செய்த தவறுகள் என்று எவற்றை சொல்வீர்கள்?

பதில்; சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு எடுத்தது முதலாவது தவறு. சிறுமி தங்குவதற்கு வீட்டின் வெளிபுறத்தில் அறை வழங்கப்பட்டதாக சிறுமியின் தாயார் கூறுகிறார். பெண் பிள்ளை என்றுகூடப் பார்க்காமல், அவரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் வீட்டுக்கு வெளியில் தனியாக தங்க வைத்துள்ளார்கள்.

சிறுமிக்கு வழங்கப்பட்ட அறையில் யன்னல்கள் இல்லை எனவும், அது ஒரு சிறிய அறை என்றும், சிறுமியின் உடைகளை வைக்க “காட்போட் பெட்டியே“ வழங்கப்பட்டுள்ளதாக அம்மா கூறுகிறார். சிறுமி தூங்குவதற்கு இருவர் படுத்துக்கொள்ளக் கூடிய இரு தட்டு இறும்பு கட்டில் ஒன்றே வழங்கப்பட்டுள்ளது. எதற்காக இருவர் தங்கும் கட்டில் வழங்கப்பட்டது?

அந்த வீட்டில் மற்றொரு ஆண் வேலைக்காரரும் இருந்துள்ளார். அவர் எங்கு தங்கியிருந்தார்? சிறுமியின் அம்மா 4 தடவைகள் அவரைப் பார்க்க வந்தும் சிறுமி, ரிஷாட்டின் புத்தளம் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளதாக கூறியிருக்கிறார்கள். எதற்காக சிறுமியை அம்மாவிடம் மறைத்து வைத்திருந்தார்கள்?

சிறுமியுடன் வாரத்துக்கு இருமுறை அதுவும் வெறும் 5 நிமிடங்கள் கூட பேசுவதற்கு இடங்கொடுக்கவில்லை என அம்மா கூறுகிறார். அதுவும் அந்த வீட்டில் இருந்த மற்றொரு ஆண் வேலைக்காரரின் தொலைபேசிக்கே அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பின்போதும் கூட சிறுமிக்கு சரியாகப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கேள்வி; சிறுமியின் மரணத்தில் பல்வேறு விடயங்கள் மர்மமாகவும் இருக்கின்றன அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்; கொழும்பு 07இல் உள்ள ரிஷாட் வீட்டிக்கு மண்ணெண்ணை எப்படி வந்தது. லைட்டர் எவ்வாறு சிறுமியின் கரங்களுக்கு சென்றது? சிறுமியின் முகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தலையில் தீக்காயங்கள் இல்லை.

தற்கொலை செய்துக்கொள்பவர்கள், தலையில் மண்ணெண்ணையை ஊற்றாமல் கவனமாக மெதுவாக உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு பற்றவைத்துக்கொள்வார்களா? என சிறுமியின் அம்மா கேள்வி எழுப்புகிறார்.

மண்ணெண்ணை மகளின் உடலில் உற்றி பற்றவைத்து மகளை கொலை செய்துள்ளார்கள் என்று அம்மா கூறுகிறார். அம்மாவின் குற்றச்சாட்டுக்களுடன் உடன்படுகிறோம்.
ரிஷாட் வீட்டில் வேலை செய்வதற்கு தான் வருவதாகவும், தான் அங்கு வந்ததும் நீ வீட்டுக்கு வந்திடலாமெனவும் அம்மா சிறுமியிடம் கூறியிருக்கிறார். ஆனால் “அம்மா நீங்க வராதீங்க“ என சிறுமி அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

எவ்வாறாயினும் 5ஆம் திகதி தான் அங்கு வருவதாக அம்மா சிறுமியிடம் கூறியிருக்கிறார். அப்படியிருக்க 3ஆம் திகதி எவ்வாறு சிறுமி தற்கொலை செய்துக்கொள்வார்?

கேள்வி; சிறுமி இறந்து அவர் புதைக்கப்பட்டுப் பின்னரே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கின்றனர். பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியுமா?

பதில்; சிறுமி உயிரிழந்த பின்னர் சிறுமியின் சொந்த ஊரான அவிசாவளை புவக்பிடிய பகுதிக்கு சென்ற இரு பொலிஸ் குழுக்கள் சிறுமியின் பழைய காதலர் யாரென தேடுவதாக கூறுகிறார்கள்.

உயிரிழந்த சிறுமியின் கன்னித்தன்மையை ஆராய்ந்து நீங்கள் (பொலிஸார்) என்ன செய்யப்போகிறீர்கள்? இதனால் உயிரிழந்த சிறுமியை கேவலப்படுத்துகிறார்கள். சிறுமியின் அம்மா, சகோதரிகளை கேவலப்படுத்தும் செயலே இது. எங்களிடம் கேட்கக்கூடாத கேள்விகளை பொலிஸார் கேட்பதாக சிறுமியின் அக்கா கூறுகிறார். சிறுமியின் சுயகௌரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

பொரளை பெலிஸார் ஏன் சிறுமி தொடர்பான தகவல்களை டயகம பொலிஸாருக்கு வழங்கவில்லை? 12 நாள்கள் வைத்தியசாலையில் சிறுமி இருந்தார் சிறுமி வாக்குமூலம் வழங்கும் நிலைமையில் இல்லை என பொலிஸார் கூறுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் ஏன் எவரும் அந்த 12 நாள்களுக்குள் கைது செய்யப்படவில்லை? சிறுமி தற்கொலை செய்துக்கொள்ள பயன்படுத்தியதாக ரிஷாட் குடும்பத்தார் கூறும், மண்ணெண்னை போத்தலை சிறுமியின் அம்மா பார்த்ததாக கூறுகிறார்.

அதில் அரைவாசி மண்ணெண்ணை இருந்ததாகவும் அந்த அம்மா கூறுகிறார். அப்படி என்றால், பொலிஸார் விசாரணைகளுக்காக அந்த மண்ணெண்னை போத்தலை கைப்பற்றியிருக்கவில்லை என்பது தெரியவருகிறது. மற்றொருப் பெரியப் பிரச்சினை அரைவாசி மண்ணெண்ணை அந்த போத்தலில் இருந்ததாக அம்மா கூறுகிறார். அரைவாசி மண்ணெண்னை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டால், உடலில் இவ்வளவு தீக்காயங்கள் ஏற்படுமா?

விசாரணைகளுக்காக டயகமத்துக்கு கொழும்பில் இருந்து பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளன. அப்படி என்றால் மத்திய மாகாணப் பொலிஸார் என்ன செய்கிறார்கள்? டயகம பொலிஸார் என்ன செய்கிறார்கள்?

கொழும்பில் இருந்து ஜீப் ஒன்றிலும் வான் ஒன்றிலும் பொலிஸார் டயகமவுக்க சென்றுள்ளனர். யாருடைய வரிப்பணம் இதற்காக செலவிடப்படுகிறது. சிறுமி பயன்படுத்தியதாகக் கூறப்படும் மண்ணெண்ணை போத்தலில், எஞ்சியிருந்த மண்ணெண்ணையை பயன்படுத்தியா கொழும்பு பொலிஸார் டயகமவுக்கு சென்றர்?

கேள்வி; இச்சம்பவத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு நடந்துக்கொண்டார்கள்? அவர்களது விசாரணைகளில் திருப்தியடைய முடியுமா?

பதில்; இந்த விடயத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் செயற்பாடுகள் வெட்கத்துக்குரியது. இவர்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் முறையாக இவர்கள் விசாரிப்பதில்லை.

இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டஅமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர், 16 வயது நிறைவடைந்ததன் பின்னரே சிறுமி ரிஷாட் வீட்டுக்கு வேலைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, 16 வயதுக்குக் குறைந்த சிறுமியே ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளார் என்கிறார்.

அப்படியானால் அஜித் ரோஹனவை தே.சி.பா.அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சவாலுக்கு உட்படுத்துகிறாரா? குற்றவாளிகளை பாதுகாக்க இவர்கள் முயற்சிக்கிறார்களா? பாதிக்கப்பட் சிறுவர்களுக்காக இவர்கள் முன்நிற்காது, குற்றவாளிகளை பாதுகாக்கவே முயற்சிக்கிறார்கள். பொறுப்பான அதிகாரி ஒருவர், ஊடகங்கள் முன்பாக இவ்வாறு கருத்துக்களை கூறுவது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை அவமதிக்கிறார்.

கேள்வி; சிறுமி அந்த வீட்டில் வேலை செய்துவந்ததை ரிஷாட்டுக்கு தெரிந்திருக்காதென சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றனவே?

பதில்; சிறுமி ரிஷாட் வீட்டுக்கு வரும்போதும், அந்த வீட்டில் உயிரிழக்கும்போதும் ரிஷாட் பதியூதீன் வீட்டில் இருக்கவில்லை என அவரது சட்டத்தரணி கூறுவதாக செய்தியொன்று வெளியாகிருந்தது. இதே செய்தியில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாட் கடந்த வருடம் டிசெம்பர் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும், பின்னர் இந்த வருடம் ஏப்ரல் 21 மாதம் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியாக இருந்தால் கடந்த வருடம் டிசெம்பர் முதல் ஏப்ரல் வரையில் ரிஷாட் வீட்டில் தானே இருந்துள்ளார்.

கேள்வி; சிறுமிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது?

பதில்; பொன்னையா (சங்கர்) கூறுவதுபோல சிறுமியின் வீட்டாருக்கு, ரிஷாட் வீட்டிலிருந்து 40 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நொவம்பர் மாதம் சிறுமி வேலைக்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அப்படியாக இருந்தால் இந்த வருடம் மே மாதம் வரையில் சம்பளம் வழங்கபட்டிருக்குமாக இருந்தல், சிறுமிக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தானே வழங்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது?

சார் (ரிஷாட்) ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டதன் பின்னர் சம்பளம் வழங்கப்படவில்லை என பொன்னையா சொல்கிறார். அப்படியாக இருந்தால் எதற்காக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது?

கேள்வி; சிறுமியின் குடும்பத்தார் செய்த தவறுகள் என்ன?

பதில்; வீட்டு வறுமையைக் காரணங்காட்டி சிறுமியை வேலைக்கு அனுப்பியது தவறு. இதுபோன்ற பலர் பெருந்தோட்டங்களில் இருந்து வீட்டு வேலைக்கு செல்கிறார்கள். பெருந்தோட்டங்களில் உள்ள பெண்களுக்கு சுயதொழிலைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்கள், குறிப்பாக பொலிஸார், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தங்களது சேவையை உரிய வகையில் செய்ய வேண்டும்.

அரச ஊழியர்கள் தங்களது பணியை உரிய வகையில் செய்யத்தவறுவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிது. இதுபோன்ற சம்பவங்கள் தங்களது பிள்ளைகளுக்கும் வரக்கூடாது என்பதற்காகவேனும், அரச ஊழியர்கள் தங்களது பணிகளை சரியாக செய்ய வேண்டும்.

பா.நிரோஸ்

Leave A Reply

Your email address will not be published.