தாதியர் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர்களினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள தாதிய ஊழியர்கள் தொழிற்சங்கம் ஒன்றினைந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் வைத்தியசாலை நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் நண்பகல் 12.30 மணிக்கு ஒன்றுகூடி பகல் 1.00 மணிவரையும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது தாதிய சேவை பதவிநிலை சேவையென சுற்று நிருபம் வெளியிடு, வாரத்தில் 05 நாட்கள் தொடர்பான ஆணைக்குழுவை நியமி, வர்த்தமானிப் பத்திரிகையை உடனே வெளியிடு, தரம் ll-05 வருடங்கள், தரம் l-12 வருடங்கள் பதவி உயர்வு சுற்று நிருபத்தை விரைவாக வெளியிடு, தாதியரின் உயிராபத்தை தடுக்க N95 மாஸ்க் வழங்கு போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள், தமது கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.