உ.பி.யில் இரண்டடுக்கு பேருந்து மீது லாரி மோதல்: 18 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம், லக்னெü- அயோத்தி நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த இரண்டடுக்குப் பேருந்தின் பின்புறம் லாரி மோதிய விபத்தில் 18 பயணிகள் பலியாகினர். செவ்வாய்க்கிழமை பின்னிரவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் மேலும் 28 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் விதைப்புப் பணிக்காக, பிகார் மாநிலத்தில் இருந்து சென்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் 130 பேர், வேலை முடிந்து தனியார் இரண்டடுக்கு பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு, பாராபங்கி மாவட்டம், லக்னெü- அயோத்தி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது அதன் அச்சு முறிந்தது. எனவே, நெடுஞ்சாலையின் ஓரம் பேருந்து நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, பேருந்தின் பின்புறம் மோதியது. அதன் காரணமாக, பேருந்து சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த பயணிகளும், பேருந்துக்கு வெளியே நின்றிருந்த பயணிகளும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு
ஏற்பட்டது.
இந்த விபத்தில் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலியானோரில் 15 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்புகொண்டு இந்த விபத்து குறித்து கேட்டறிந்ததாகவும், விபத்தில் பலியானோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்ததாகவும், கூடுதல் தலைமைச் செயலர் அவானிஷ் அவஸ்தி தெரிவித்தார்.
சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.