‘மொட்டு’ கூட்டு அரசிலிருந்து பங்காளிகள் விரும்பினால் வெளியேறலாம்! அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சில பங்காளிக் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு உண்டு. ராஜபக்ச அரசில எவரும் இணைந்துகொள்ளலாம்; விருப்பமில்லாவிடின் தாராளமாக வெளியேறலாம்.”
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
பங்காளிக் கட்சிகள் வெளியேறுவதால் எவ்வித பாதிப்பும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பல்வேறு கொள்கைகயையுடைய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியை அமைத்துள்ளோம்.
இந்தக் கூட்டணியில் பொதுஜன முன்னணியே பிரதான கட்சியாக உள்ளது. கூட்டணிக்குள் கருத்து வேறுப்பாடுகள் பல காணப்படுகின்றன.
அரசிலிருந்து வெளியேறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அமைச்சுப் பதவிகளையும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும், அரச வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் அரசி இருக்க விருப்பமில்லையென்றால் வெளியேறுவோம் என்று கூறிக் கொண்டிருக்காமல் அரசிலிருந்து தாராளமாக வெளியேறலாம்” என்றார்.