ஆராதனையின் போது கண் திறந்து பார்த்த அம்மன்… காண அலைமோதிய மக்கள்!

தமிழகத்தில், கரூர் மாவட்டம் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட கோயிலுக்குப் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையில், கோயிலின் பரம்பரை பூசாரி சரவணனின் மகன் சக்திவேல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டியுள்ளார். பின்புதான் வைத்திருந்த செல்போனில் அம்மனை போட்டோ எடுத்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த போது அம்மனின் கண்ணில் திருநீர் பூத்திருந்தது போல் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகிலிருந்த தனது தந்தையிடம் கொண்டு போய் காட்டியதும் அவரும் மகிழ்ந்துள்ளார்.
சாமி கண் திறந்து விட்டது என இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனையடுத்து, 2 சக்கர வாகனம், 4 சக்கர வாகனத்தில் கூட்டம், கூட்டமாக வந்து பொதுமக்கள் அதிசயமாகப் பார்த்துச் செல்கின்றனர். அங்கு வந்தவர்கள் தங்கள் செல்போனில் அம்மனை செல்பி எடுத்து முண்டியடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்கின்றனர்.
மேலும், தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கூட்டத்தைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
அப்போது அங்கு வந்த பூசாரி சரவணன் அம்மனின் கண்ணிலிருந்த திருநீரை துடைத்து விட்டுச் சென்றார். அதன் பின்னரும், பொதுமக்கள் சாமியை வந்து பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.
அம்மன் கண் திறந்து விட்டதாகப் பரவிய தகவலால் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.