ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனையில் என்ன நடந்தது?
ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று (31) பேராதனை போதனா வைத்தியசாலையில், மூவரடங்கி விசேட வைத்திய குழுவினால் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5:15 மணி வரை இந்த பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
ஹிஷாலினியில் சடலம் மீது முதலில் CT ஸ்கேன் செய்யப்பட்டு , உடலினுள், உள் காயங்கள் உள்ளனவா?, எலும்புகள் ஏதாவது முறிந்துள்ளனவா? என்பன போன்றவை தொடர்பில் CT ஸ்கேன் மூலம் ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீண்ட நேரம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடலின் சில பகுதிகளிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாதிரிகள் ஆய்வு கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்த விசேட வைத்திய குழு இரசாயன பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி , அங்கிருந்து வரும் முடிவுகளை எதிர்பார்த்துள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாவது பிரேத பரிசோதனை தொடர்பான முழுமையான அறிக்கை வெளியிடப்படும்.
சிறுமி ஹிஷாலினியின் சடலம் பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்படுள்ளது எனவும், முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை சடலம் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.