வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள்.
வத்தளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தினால் ரூபா 10000 பெறுமதியான வீட்டுப் படுக்கை உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தின் அனுசரணையுடன் வத்;தளை பிரதேசத்தில் சமீபத்தில் கன மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ ஆகிய 700 குடும்பங்களுக்கு தலா ரூபா 10000 பெறுமதியான வீட்டுப் படுக்கை உகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவம் வத்தளை ஜும்ஆப் பள்ளிவாசலில் ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தின் சமூக சேவைப் பிரிவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பணிப்பாளர் தேசபந்து இம்ரான் ஜமால்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதியாக அப்துல்லா சயித் அல் சஹ்ரானி கலந்து கொண்டார்.
இதன் போது ஒரு குடும்பத்திற்கு 02 இரண்டு தலையணைகள், ஒரு படுக்கை மெத்தை, 02 படுக்கை விரிப்பு, 01 டவல், 02 நுளம்பு வலைகள் என தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெலிக்கடமுல்ல பௌத்த விஹாராதிபதி, வத்தளை பிரதேச செயலாளர், உப பிரதேச செயலாளர், வத்தளை மற்றும் மாபோல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மாபோல வத்தளை நகர சபையின் முன்னாள் நகரபிதாவும் பள்ளிவாசல் தலைவருமான முஹமட் நௌசாட் மற்றும் கிரா உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)