30 வயது இளைஞரை கடத்தி கத்திமுனையில் திருமணம் செய்த 50 வயது பெண்!

மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ் கேஷர்வானி (30). இவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில், தனது அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக 50 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீண்ட நாட்களாக என்னை நிர்பந்தித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி அந்த பெண் தனது நண்பர்களுடன் என்னை தாக்க வந்தார். தொடர்ந்து, சில காவலர்களுடன் கூட்டுச் சேர்ந்து என்னை பொய் வழக்கில் சிக்க வைக்கவும் முயன்றார். இதையடுத்து, ஜாபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்றே புகார் தெரிவித்திருந்தேன் எனினும், அது பயனளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, ஜூன் 16ம் தேதியன்று, அந்த பெண் அவரது நண்பர்களின் உதவியுடன் கோஹல்பூர் காவல் நிலையத்திற்கு முன்னால் கத்தி முனையில் என்னை கடத்திச் சென்று அவரது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.
தொடர்ந்து, ஜூன் 17ம் தேதி அவர் கத்தி முனையில் என்னை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று ‘மயக்க மருந்து’ கொடுத்து மயக்க நிலையிலே, அவர் என்னை கட்டாயமாக தாலி கட்ட வைத்தார்.
பின்னர், அந்த பெண்ணின் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து, அன்றைய தினமே, ஜபல்பூர் ரேஞ்ச் ஐஜி, எஸ்பி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன், ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதனை நிரூபிக்கும் பொருட்டு கோஹல்பூர் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளையும் அவர் கோரியுள்ளார்.
தொடர்ந்து, அவரது புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதையடுத்து, கேஷர்வானியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஜபல்பூர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.