சார்ஜ் போட்டபடி பேசிய போது செல்போன் வெடித்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

குஜராத்தில் மெஹ்சானாவின் உள்ள சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷ்ரத்தா தேசாய் (17). இவர் மொபைல் போனை சார்ஜில் போட்டப்படி உறவினருடன் பேசிவந்துள்ளார். அப்போது, திடீரென செல்போன் வெடித்து மாணவி படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பாகவே, மாணவியின் உடலை பெற்றுச் சென்ற குடும்பத்தினர், உடனடியாக உடலை எரித்துள்ளனர்.
இதுதொடர்பாக மெஹ்சானாவின் காவல் துணை ஆய்வாளர் எம்ஜே பரோட் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்னர் தான் எங்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, நாங்கள் அந்த கிராமத்திற்கு சென்ற போது, மாணவியின் உடல் எரிக்கப்பட்டு, உறவினர்கள் தகனத்திற்கு பிந்தைய சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து, உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஆரம்பட்ட விசாரணையில், மாணவி தேசாய் மொபைல் போனை சார்ஜில் போட்டப்படி தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் பேசிக்கொண்டிருந்த மொபைல் போனின் பேட்டரி வெடித்திருக்க வேண்டும் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மொபைல் போன் வெடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.