கடன் வாங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதி- சிறுதொழில் முனைவோர்களுக்கு சிக்கல்
தொழில் நிறுவனங்கள், கடன் பெறுவது ஒரு வங்கியிலும், நிறுவனத்தின் மற்ற தேவைகளுக்கான பண பரிவத்தனையை மேற்கொள்ள, வேறு ஒரு வங்கியிலும் கணக்கு வைத்திருப்பது இயல்பாக உள்ளது. இந்நிலையில் கடன் பெறுவதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறையையும், ஒழுங்கையும் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ஒரு நிறுவனம் வங்கிகளில் வாங்கி இருக்கும் மொத்த கடனில், குறைந்த பட்சம் 10 சதவித கடன், எந்த வங்கியில் பெறப்பட்டு உள்ளதோ, அந்த வங்கியில் மட்டுமே நடப்பு கணக்கு என்று அழைக்கப்படும் CURRENT ACCOUNTஐ வைத்திருக்க முடியும். அவ்வாறு, மொத்த கடனில் 10 சதவிதம் அளவிற்கு, ஒரு வங்கியில் கடன் பெறாமல், அந்த வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருந்தால், அந்த நடப்பு கணக்கு ஜூலை 31ம் தேதியுடன் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பெரு நிறுவனங்கள் அதிக அளவில் கடன் வாங்குவதால், மொத்த கடனில் 10 சதவிதம் என்ற விதிமுறையை அவர்களால் பெரும்பாலும் பூர்த்தி செய்து விட முடிகிறது.
ஆனால் சிறு நிறுவனங்கள், தனியார் வங்கியில் கடனுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் பொதுத்துறை வங்கியில் கடன் பெற்றுவிட்டு, இணைய வழி சேவை நன்றாக இருக்கிறது என்பதற்காக, தனியார் வங்கியில் நடப்பு கணக்கை தொடங்கி, அதில் பரிவர்த்தனை செய்கின்றன. இந்நிலையில், தனியார் வங்கியில் கடன் பெறாமல், அதில் நடப்பு கணக்கு மட்டும் வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நடப்பு கணக்கு 31ம் தேதி முதல் முடக்கப்படும்.
தொழில் முறை பரிவர்த்தனை என்பதால், வங்கிகள் போட்டி போட்டு கொண்டு, சேவை வழங்க வாடிக்கையாளர்களை நாடுகின்றன. ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி தொழில் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவால், தொழில் பாதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. சிறு நிறுவனங்கள் கொரோனா கால பாதிப்பில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டு இருக்கும் நிலையில், நிறுவனங்கள் பயன்படுத்தும் நடப்பு கணக்கில் இது போன்ற கெடுபிடிகள் அமலானால் தொழில்துறையை மேலும் பாதிக்கும் என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது.