O/L பரீட்சை முடிவை வெளியிடுவதில் நெருக்கடி! – காரணத்தை விளக்குகின்றார் ஆணையாளர்.
2020ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
அழகியல் பாடங்களுக்கான செயல்முறை பரீட்சைகள் உரிய நேரத்தில் நடத்த முடியாதுள்ளமை இதற்கான ஒரு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜி.சீ.ஈ. சாதாரண தர மாணவர்களுக்கான செயல்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
2020 ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சை இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.
நாடு இயல்பு நிலையிலிருந்தால் ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கூறினார்.
இலங்கையில் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கி, அரசு அலுவலகங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். அதேவேளை, ஒரு மாத கால பயணக் கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
இந்த நடவடிக்கைகளும் ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் தொற்று நோயுடன் நாட்டின் சூழ்நிலைகள் மாறும்போது சரியான திகதியை வெளியிட முடியாதுள்ளது எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித மேலும் தெரிவித்தார்.