தமிழக சட்டப்பேரவையில் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள்
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 15 தலைவர்களின் புகைப்படங்கள் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் 16-வதாக திறக்கப்படுகிறது.
பேரவையில், 1948 ஜூலை மாதம் மகாத்மா காந்தியின் புகைப்படம் திறக்கப்பட்டது. அதனை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்தார். அடுத்த ஒரே மாதத்தில் ராஜாஜிக்கு திருவுருவப்படம் திறக்கப்பட்டது, இதனை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் திறந்து வைத்தார். ஒரு தலைவர் உயிருடன் இருக்கும்போது திறக்கப்பட்ட உருவப்படம் இதுவாகும்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு, 1964-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருவள்ளுவரின் படத்தை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார். பின்னர், 1969-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் உருவப்படத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார்.
இதன் பிறகு, அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆா். முதல்வராக இருந்த போது ஐந்து தலைவா்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப்படம் 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டியின் கையால் திறந்து வைக்கப்பட்டது,
இதைத்தொடர்ந்து, 1980-ஆம் ஆண்டு பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப்படங்களை ஒரே நாளில் கேரள முன்னாள் ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்தார். பின்னர், 1992-ல் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை, அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு 2018-ல் ஜெயலலிதாவின் புகைப்படமும், 2019-ல் ராமசாமி படையாட்சியின் உருவப்படமும் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களையும் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த வரிசையில் 16-வது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார்.