ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ஊடகங்களின் பொய் : மொஹமட் பாயிஸ் பகிரங்க குற்றச்சாட்டு
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் அவருக்கு ரிசாத் பதியுதீனின் வீட்டில் எந்த குறையும் இல்லாமல் சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன என மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே மொகமட் பாயிஸ் தெரிவித்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி அவ்வப்போது பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் சகல வசதிகளையும் கொண்ட அறை அவருக்கு தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளதே உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக இந்த சம்பவத்தை பயன்படுத்த ப் பார்க்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
மேற்படி மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளபோது பல்வேறு ஊடகங்களிலும் நபர்கள் பல்வேறு விதமாக தகவல்களை வெளியிட்டு சம்பவத்தின் உண்மைத்தன்மைக்கு மாறாக சம்பவத்தை திசைதிருப்ப பார்க்கின்றனர்.சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்த பார்க்கின்றனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் இதுவரை ஊடகங்களில் வெளிவராத சில விடயங்கள் இவை.
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமிக்கு மேற்படி வீட்டில் எந்த சித்திரவதையும் வழங்கப்படவில்லை. அதேவேளை அவரது தாய் அல்லது உறவினர்கள் அவரோடு தொலைபேசி மூலம் கதைப்பதற்கு மேற்படி சிறுமிக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பில் பணி புரியும் அவரது சகோதரனோ அல்லது அவர்களது வீட்டில் தாயோ, தந்தையோ ஒரு போதும் அவரை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்தது கிடையாது.
டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஹிசாலினி 2020 நவம்பர் 18ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அப்போது அப்போது அவர் தமக்கு 18 வயது என்பதையும் தெரிவித்துள்ளார்.
அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவரது பிறந்த திகதி 12-11 2004 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவர் அந்த வீட்டில் பணிக்கு சேர்ந்த போது அவரது வயது பதினாறு வயதும் ஆறு நாட்களும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் அவர் குறைந்த வயது சிறுமி அல்ல என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. எனினும் சில தரப்பினர் அவரை குறைந்த வயது சிறுமி என்றே குறிப்பிட்டு குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தியதாக ரிசாட் பதியுதீன் மீது மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டு ஏற்க முடியாதது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கடந்த 2020 ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேற்படி சிறுமி அவரது வீட்டிற்கு பணிக்கு அமர்த்தப் படும்போது ரிசாத் பதியுதீன் சிறையில் இருந்துள்ளார்.
– லோரன்ஸ் செல்வநாயகம்