தர நிா்ணய விதிகளை கடைப்பிடிக்காவிடில் பொம்மை தயாரிப்பாளா்களுக்கு கடும் அபராதம்
அரசு கட்டாயமாக்கியிருக்கும் தர நிா்ணய நடைமுறைகளைப் பின்பற்றாத பொம்மை தயாரிப்பாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்கள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், மத்திய ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை சாா்பில் அடையாளம் காணப்பட்ட 100 ரசாயனம் மற்றும் ரசாயன இடுபொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கச்செய்வதற்கு, உள்நாட்டு ரசாயன உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
வணிகத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. அதில் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அந்தக் குழு அளித்துள்ளது.
மத்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்தாத பொம்மை உற்பத்தியாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
சரக்கு வாகனங்களுக்கான மின்னணு எடை ரசீது நடைமுறை, ரயில் சரக்குப் போக்குவரத்து, துறைமுக போக்குவரத்து, ஜிஎஸ்டி வருவாய் மற்றும் மின்சார நுகா்வு என்பன உள்ளிட்ட பல்வேறு உயா் அதிா்வெண் குறியீடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் ‘வி’ வடிவ வளா்ச்சி அடைந்திருப்பது தெரியவந்திருப்பதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புக்கான துறை அறிக்கை சமா்ப்பித்திருக்கிறது. ஆனால், அந்த குறியீடுகள் குறித்த அனுபவபூா்வ புள்ளிவிவரங்கள் எதையும் அந்தத் துறை சமா்ப்பிக்கவில்லை. எனவே, இதுதொடா்பான விரிவான விவரங்களை அந்தத் துறை சமா்ப்பிக்க வேண்டும்.
அதுபோல, தேசிய சரக்குப் போக்குவரத்து மசோதா தயாரிப்பில் எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையை திறம்பட நிா்வகிக்கவும், அந்த நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் தேசிய அளவிலான ஒரு வழிகாட்டி நடைமுறையை கொண்டு வரும் வகையில் அதுதொடா்பான சட்டத்தை விரைந்து அமல்படுத்துவது அவசியம்.
மேலும், நாட்டில் ஆராய்ச்சி மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புக்கான துறை மத்திய நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு, ஆராய்ச்சி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான வரிச் சலுகையை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.