ஹிஷாலினி தங்கியிருந்த அறை சுவரில் இதை எழுதியது யார்? அர்த்தம் என்ன? (படம் உள்ளே)
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (03) தெரிவித்தார்.
ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த அந்த சொற்களின் அர்த்தம் ‘என் சாவுக்கு காரணம்’ En Savuku Karanam என்பதாகும் என, அவர் கூறினார்.
இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதற்காகவும், அதற்காக ஹிஷாலினி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய அப்பியாச கொப்பிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் தனது தங்கைக்கு ஆங்கிலம் எழுதுவதற்காக இயலுமை கிடையாது என தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் சகோதரனான திருபிரசாத் தெரிவித்துள்ளார்.
தனது தங்கை அவிசாவளை − புவாக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ம் தரம் வரை மாத்திரமே கல்வி பயின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது தங்கை தங்கியிருந்த அறையில், ‘En savuku karanam’ (என் சாவுக்கு காரணம்) என ஆங்கிலத்தில் எழுதியிருந்தமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனது தங்கைக்கு ஏதாவது ஒன்றை பார்த்து எழுதுவதற்கான இயலுமை காணப்பட்டதாகவும், ஆங்கில எழுத்துக்களை இணைத்து எழுதுவதற்கான கல்வி அறிவு இருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்