கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகமாக உள்ளதாகவும், இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30,549 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் 422 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 48 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் தொற்று பரவல் அதிகளவில் உள்ளதாகவும், இந்த நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் நபர் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதாகக் கூறிய அவர், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், தமிழ்நாடு, மிசோரம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தொற்று பரவல் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதாகவும், இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கேரளாவில் இரண்டாவது அலை பரவலின் போது தினசரி தொற்று எண்ணிக்கை 12,000 முதல் 14,000 வரை பதிவாகி வந்தது. ஆனால், தற்போது தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருவதால், இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றாளர்களை வீட்டு தனிமையில் வைப்பதை முறையாக கையாளாததே தொற்று பரவலுக்கு முக்கியக் காரணம் என்று மத்திய நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்தும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் டெல்டா வகை தொற்று பாதிப்புக்கு ஆளானால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.