ரிசாத் குற்றப்பத்திரிக்கை இல்லாமல் 102 நாட்கள் தடுப்பிலிருப்பது முழு பாராளுமன்றத்துக்கே சவால் மனோ கணேசன்.
எம்பி ரிசாத் பதுர்தீனை குற்றப்பத்திரிகை இல்லாமல் 102 நாட்கள் தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பது தவறு. இது முழு பாராளுமன்றத்துக்கே விடுக்கப்படும் சவாலாகும். அரசியல் காரணமாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நான் நம்புகிறேன். சட்டம் ஒழுங்கு பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகர இதற்கு பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை விளித்து பேசிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இன்று காலையிலேயே நானும், ரணில் விக்கிரமசிங்க எம்பியும் இதுபற்றி பேச எண்ணினோம். ஆனால், சபாநாயகர் நேரம் ஒதுக்கவில்லை. ஆகவே இப்போது ஒஎசுகிறேன்.
இது இன்று ரிசாத் பதுர்தீனுக்கு நடக்கிறது. நாளை எனக்கு நடக்கும். எதிர்காலத்தில் நாம் ஆட்சிக்கு வரும் போது, உங்களுக்கும் நடக்கும். ஆகவே இது ஒரு பிழையான முன்னுதாரணம். இதை உடன் நிறுத்துங்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீங்கள் மகா சூத்திரதாரியை கைது செய்து விட்டதாக இந்த சபையில் அறிவித்தீர்கள். இன்னும் பலரையும் கைது உள்ளீர்கள். அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தயார் செய்கிறீர்கள். அதை சட்டப்படி செய்யுங்கள். ஆனால் ரிசாத் பதுர்தீனை குற்றப்பத்திரிக்கை இல்லாமல் சும்மா அடைத்து வைத்து உள்ளீர்கள்.
இது அரசியல். உங்கள் அரசியல் தேவைக்காக அவரை அடைத்து வைத்துள்ளீர்கள்.
ஒன்றில் அவரை உடன் விடுவியுங்கள். அல்லது அவர் பற்றிய குற்றப்பத்திரிக்கையை முன்னிலை படுத்துங்கள். ஆனால் நீங்கள் அவரை சும்மா தடுத்து வைத்துள்ளீர்கள்.
இது தொடர்பாக இன்று எதிரணி கட்சி தலைவர்கள் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் சபாநாயகர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவை சந்தித்து எமது ஆட்சேபனையை தெரிவித்தோம். இந்த சந்திப்பில் சஜித் பிரேமதாச, மனோ கணேசன், சுமந்திரன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுர்தீன், லக்ஸ்மன் கிரியல்ல, ரஞ்சித் மத்தும்பண்டார, திஸ்ஸ அத்தநாயாக்க ஆகியோர் கலந்து கொண்டோம்.
எமது ஆட்சேபனையை அடுத்து சபாநாயகர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு துறையினருடன் தொடர்பு கொண்டு பதிலை பெற்று சபைக்கு அறிவிப்பதாக எமக்கு உறுதி அளித்தார்.