கைவிலங்குடன் வந்து மாமியாருக்கு இறுதி மரியாதை செலுத்திய ரஞ்சன் (Photos)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் உறவினரின் கோரிக்கைக்கு அமைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நீதிமன்றம் விசேட அனுமதி வழங்கியதையடுத்து அவர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் இறுதிச் சடங்குக்கு சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்டார்.
அவரது மைத்துனர் ஒருவரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.