ஒலிம்பிக் கனடாவின் ஆண்ட்ரூ டி கிராஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியை 19.62 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 200 மீட்டரில் தனது அதிசிறந்த காலத்தையும், கனடாவின் தேசிய சாதனையையும் முறியடித்தார்;.
அதுமாத்திரமின்றி, 93 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் வரலாற்றில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற முதல் கனடா நாட்டு வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக 1928 ஆம்டர்டாம் ஒலிம்பிக்கில் பேர்ஸி வில்லியம்ஸ் ஆண்களுக்கான 200 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, 2016 ரியோ ஒலிம்பிக்கின் 100 மீட்டரில் வெண்கலப் பதக்கத்தையும், 200 மீட்டரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற ஆண்ட்ரூ டி கிராஸ், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் 100 மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
எனவே, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்கான தனது 7 ஆண்டுகள் கனவு இன்று நடைபெற்ற 200 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 26 வயதான ஆண்ட்ரூ டி கிராஸ் நிறைவேற்றியுள்ளார்.
அதுமாத்திரமின்றி, கடந்த மூன்று (2008, 2012, 2016) ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த உசைன் போல்ட்டின் வெற்றிடத்தை தொடர்ந்து தற்;போது புதிய ஒலிம்பிக் சம்பியனாக 200 மீட்டரில் ஆண்ட்ரு டி கிராஸ் முத்திரை பதித்துள்ளார்.
இதனிடையே, குறித்த போட்டியில் அமெரிக்கா வீரர்களான கென்னி பெட்னரெக் வெள்ளிப் பதக்கத்தையும், நோவாஹ் லையல்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.