2024 ஜனாதிபதி தேர்தலில் கோட்டா மீண்டும் வெற்றி பெறுவாரா? : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

சில காலத்திற்கு முன்பு, கோட்டாபய , தனது அரசாங்க கூட்டாளிகளிடம் அவர் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் சிங்கள-பௌத்த வாக்காளர்களுக்கு ஒரு பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய உதவுவார் என்றும் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இக் கதை வெளியான பின்னர், கோட்டாபய (ගම සමඟ පිළිසඳර) கிராமத்துடனான உரையாடல் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதன்பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை அறிவிக்க அரசாங்கத்திற்குள் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. நாமல் வேட்பாளர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை என்று அரசு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

சமீபத்தில், பசில் ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பசில் ராஜபக்சவை 2024 ஜனாதிபதி வேட்பாளர் என்று அழைக்கத் தொடங்கினர். பசிலின் ஆதரவாளர்கள் 2024 ஜனாதிபதி வேட்பாளரை குறிவைத்து பாரிய பிரச்சாரத்தையும் தொடங்கினர்.

இவ்வேளையில் இடம் பெற்ற ஊடக முக்கியம் வாய்ந்தேருடனான சந்திப்பின் போது, ​​கோட்டாபய தனக்கு இன்னொரு பதவிக்காலம் இருப்பதாகக் கூறினார். அதன் பொருள் , அவர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்பதைக் பகிரங்கமாக சொல்லாமல் சொன்னார்.

இந்த கதையை கோட்டாபய சொல்லி சரியாக ஒரு வாரம் ஆகிவிட்டது. கோட்டாவின் பேச்சு குறித்து , அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டுமேசில  கருத்துகளை முன்வைத்தார் . அவர் , அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கோட்டாபய கூறியதும் எதிர்க்கட்சிகள் பயந்து விட்டன என  கூறினார்.

‘மொட்டு கட்சி ஏன் மௌனம் சாதித்தது?’

கோட்டாபய அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் , அவர் மொட்டு கட்சி அபேட்சகராகத்தான்  வர வேண்டும். அப்படியானால், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவதாக மொட்டு கட்சிதானே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஆனால் மொட்டு கட்சி அதைப் பற்றி பேசவே இல்லை.

“தனது சகோதரர்களுடன் விவாதிக்காமல்  கோட்டாபய அப்படி பேசினார் என்று அர்த்தம் கொள்ளலாமா?”

2015 இல் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர், மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கோட்டாபய பல முறை கூறி வந்தார். இறுதியில், ராஜபக்ச குடும்பமே கோட்டாபயவை வேட்பாளராக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்தது. அவ்வளவுதான். அதுவும் 2019 தேர்தல் நெருங்கிய பின்னர்தான் அந்த முடிவையும்  எடுத்தார்கள்.

கோட்டாபய , ராஜபக்ச குடும்பத்தின் அங்கீகாரத்தை 2024 ல் பெற முயல்வாரா ?

உண்மையில், இந்த முறை கோட்டாபயவுக்கு,  ராஜபக்ச குடும்பத்தின் ஒப்புதல் தேவையில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக சரியான நேரத்தில் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து , தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முடியும். பிறகு ராஜபக்ச குடும்பமோ அல்லது மொட்டு கட்சியோடு இணைந்த கட்சிகளோ  அதை தடுக்க முனைய மாட்டார்கள்.

‘கோட்டா அந்த ரிஸ்கை எடுப்பாரா?’

மஹிந்தவின் காற்று (මහින්ද සුළඟ) என ஒரு அமைப்பை நகர்த்திய முன்னோடிகளான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில , மைத்திரிபால சிரிசேன ,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்  ராஜபக்ச சார்பு ஊடகங்களிலிருந்து 2019 ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு கோட்டாபயவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு ஆகியவை பரந்து கிடைத்தது.

‘இந்த முறை கோட்டாவுக்கு அந்த வலிமை கிடைக்குமா ..?’

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்,  2019 ஆம் ஆண்டு போல் இம்முறை கோட்டாபயவுக்கு ஆதரவளிக்க முன் வர வாய்ப்பில்லை. 2019 களில் கோட்டாபயவை கொண்டு வருவதால் , கோட்டாபய தங்களுடன் இணைந்து தாங்கள் நினைப்பது போல , வேலை செய்வார் என அவர்கள் நினைத்தார்கள். அடுத்ததாக ராஜபக்ச குடும்பத்திற்குள் விமலுக்கும்,  உதயவுக்கும் இருந்த மிகப்பெரிய பிரச்சனையான  பசிலை , கோட்டா  கண்டு கொள்ளாமல் விடுவார் என அவர்கள் நினைத்திருந்தார்கள். அதுவும் நடக்கவில்லை. தங்களுக்கு உயர் அமைச்சு  பதவிகளையாவது வழங்கி ,  கோட்டா அவர்களின் நிகழ்ச்சி நிரலுடனாவது , வேலை செய்வார் என அவர்கள் கனவு கண்டார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி எதுவுமே நடக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அமைச்சு பதவிகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. கோட்டா அவர்களின் நிகழ்ச்சி நிரலில்  வேலை செய்ய மட்டுமல்ல ,   அவர்களிடம் கோட்டா செய்யும் எந்த விடயத்தையும் ஆலோசிக்கக் கூட இல்லை. கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து விமலை இரண்டாவது இடத்துக்கும், உதய கம்மன்பிலவை மூன்றாவது இடத்துக்கும் தள்ளி வீழ்த்திய சரத் வீரசேகரவுக்கு கோத்தபாய மிகவும் சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகளை வழங்கினார்.

அந்த நேரத்தில் என்னால் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியவில்லை. 2024 என் சொந்த அரசாங்கம் வருகிறது. நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் “

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் விமல் மற்றும் கம்மன்பிலவை கோத்தபாய வரவழைத்து அப்படிச் சொன்னால், விமல் மற்றும் உதய கம்மன்பில என்ன சொல்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் விமல் மற்றும் உதய அதை நம்ப மாட்டார்கள் என அறிந்தே உள்ள கோட்டாபய, ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விமல் மற்றும் உதயவின் வாயை மூடி , முடக்கி போடவே முயற்சிப்பார். ஏனென்றால், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களாக அணுகப்பட்ட விமல் மற்றும் உதயவுக்கு ராஜபக்ச குடும்பம் ஏற்கனவே தண்ணி காட்டியது கோட்டாவுக்குத் தெரியாதல்லவே.

‘பிறகு மைத்திரிபால ..?’

மைத்திரிபால 2019 ல் கோத்தபாயவை ஆதரிக்க முடிவு செய்ததற்கு காரணமே, அவர் மைத்திரிக்கு  பிரதமர் அல்லது துணை ஜனாதிபதி போன்ற பதவியொன்றை கொடுப்பார் எனும் நம்பிக்கையில்தான். இறுதியாக, மைத்திரியை கருவேப்பிலை போல ஆக்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமானவர்களுக்கு கூட  அவர்கள் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை. மைத்திரியோடிருந்து பிரிந்து மொட்டு கட்சியில் இணைந்த எஸ். பி. போன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலிமையானவர்களுக்கு போக்குக்கு இடமில்லா நிலை.

‘தவறு இருந்தது. 2024 என்னை ஆதரியுங்கள். நான் உறுதியளித்ததை செய்வேன். ‘

கோட்டாய 2024 ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு நினைத்து, அவர் மைத்திரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த . எஸ்.பீ. திசாநாயக்க போன்றோர் கோட்டா இப்படி சொன்னாலும் நம்புவார்கள் என்பது சந்தேகமே. மறுபுறம், விமல் மற்றும் உதய ஆகியோரது சிறகுகளை முறித்து போடலாம் , ஆனால் மைத்திரிபால மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறகுகளை முறிப்பது எளிதல்ல.

2019 ல் கோட்டாவை ஆதரித்த ராஜபக்ச சார்பு ஊடகங்கள் , 2024ல் கோட்டாவை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. காரணம், 2024 க்குள், ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களை மக்கள் துணிந்து நிராகரிக்க பயப்பட மாட்டார்கள். அடுத்து  2024 தேர்தல் மதில் மேல் நடப்பது போல் இருக்கும் என்பதால், ஊடகங்களும்  ராஜபக்சக்களுக்கு முன்போல் துணிந்து ஆதரவளிக்க  பயப்படும். இறுதி பகுப்பாய்வில், ஊடகங்களுக்கும் ரேட்டிங்  தேவை.  அதே போல் 2024 ஆம் ஆண்டும் வணிகங்கள் செழித்து வளர்ந்தால், விளம்பரங்கள் மூலம் ஊடகங்களை வழிநடத்தும் தொழில் அதிபர்கள் மீண்டெழலாம். அவர்களே  வீழ்ந்து கிடந்தால் விளம்பர அனுசரணைகளை , அவர்கள்  வழங்குவர் என நினைக்க முடியாது.

கோட்டாவை 2019 ல்  வெற்றி பெற வைக்க முன்வந்த துறவிகள் மற்றும் சிங்கள பௌத்த படைகள் 2024 இல் என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பார்க்க முடியாது. மறுபுறம், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற சிங்கள பௌத்த வாக்குகள் அளவு கூட , சென்ற தேர்தலில்  கோட்டாபய பெறவில்லை,

கோட்டாபாயவால் , அவர் எதிர்பார்த்த அளவுக்கு  ஜனாதிபதி தேர்தலலில் சிங்கள பௌத்த வாக்குகளை பெற முடியவில்லை . மஹிந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வந்த நேரம்  போன்றதொரு எதிர்ப்பையும், மக்களின் அதிருப்தியையும் பெற்ற நிலையில்தான் கோட்டாபய 2024ம் ஆண்டு தேர்தலுக்கு வரவிருக்கிறார். இந்நிலையில் சிங்கள- பௌத்த வாக்குகளைப் பிரியும். சமூக ஊடகங்களின் மூலம் எழுந்துள்ள  அரசாங்கத்திற்கு எதிரான அலையைப் பார்க்கும்போது, ​​கோட்டா 2019 இல் பெற்ற புதிதாக கிடைத்த  1.1 மில்லியன் வாக்குகளை அடுத்த முறை இழப்பார் என்பது தெளிவாகிறது. 2015 இல் மஹிந்தவுக்கும் 2019 இல் கோத்தாவுக்கும் வாக்களித்த 58 இலட்சங்களில், குறைந்தபட்சம் ஒரு சிலர் வாக்களிக்க போவதில்லை என முடிவு செய்து வீட்டிலேயே இருப்பார்கள். இதனால் சிங்கள- பௌத்த வாக்குகள் கோட்டாவுக்கும் ,  எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் இடையில் பகிர்ந்து போகும். எப்படியிருந்தாலும், கோட்டா வந்தாலும் வராவிட்டாலும், சிறுபான்மை வாக்குகள் ,  மொட்டு கட்சி வேட்பாளருக்குப் கிடைக்காது என்பது உத்தரவாதம்.

‘அப்படியென்றால் எப்படி கோட்டா ஜெயிக்க முடியும் ..?’

இந்த யதார்த்தத்தை கோட்டா  அறியாதவர் அல்ல. இந்த யதார்த்தத்தை அறிந்த கோட்டா, பதவியில் இருக்கும்போது, ​​மொட்டு கட்சியின் வேறொரு வேட்பாளரை அனுமதித்து விட்டு , பார்த்துக் கொண்டிருப்பார் என நினைத்தும் பார்க்க முடியாது. கோட்டா , அவர் வெற்றி பெற முடியுமா எனும்  ஒரு முயற்சியில் மீண்டும் இறங்குவார். அந்த முயற்சியாக, மொட்டு அரசாங்கத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் நிலை நிறுத்த முயற்சிப்பார் .  எனவே கோட்டா ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வார் என்று கணிக்க ஜோதிடர்கள் தேவையேயில்லை.

  • உபுல் ஜோசப் பெர்ணாண்டோ  ගුරුදා විග්‍රහය குருதின பகுப்பாய்வு
  • தமிழில் மொழி பெயர்ப்பு : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.