100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் கிளிநொச்சி, பூநகரியும் இணைப்பு!
இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட 100 நகரங்களை அபிவிருத்திசெய்து அழகுபடுத்தும் திட்டத்தில் கிளிநொச்சியும், பூநகரியும் இணைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகரில் டிப்போ சந்தியும், பூநகரியில் வாடியடி சந்தியும் அபிவிருத்திசெய்யப்பட்டு அழகுபடுத்தப்பட நகர அபிவிருத்தி அதிகாரசபையினரால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் இரண்டாம் நிலையிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட நகரங்களை அபிவிருத்திசெய்து, அழகாக்குவது இந்தத் திட்டத்தின் பிரதான நோக்காகும்.
பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவின் பொறுப்பின்கீழ் வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினரால் இந்தத் திட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதில், கண்டி, காலி, யாழ்ப்பாண மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட நகரங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை, மருதனார்மடம், கொடிகாமம், நாவற்குழி, நெல்லியடி உள்ளிட்ட நகரங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தி மற்றும் பூநகரி வாடியடியும் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு இடங்களையும் அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்கான திட்ட வரைபுகள், வட மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்தினரால், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுமதிக்காக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ தலைமையில் வேலணையில் கடந்த மாதம் இடம்பெற ஏற்பாடாகியிருந்தபோதும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அது பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.